Published : 22 Jan 2014 07:00 PM
Last Updated : 22 Jan 2014 07:00 PM

கோவை: பாரத விடுதலைக்கு மலேசியா வாழ் தமிழர்கள் செய்த உதவி பதிவாகவில்லை

‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மலேசியா வந்தபோது, ஆங்கிலேயர் காலனி ஆதிக்கத்திலிருந்து தாய் நாட்டுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நகை, பணம் மற்றும் உடைமைகளை கொடுத்தவர்கள் மலேசியா வாழ் தமிழர்கள். அது இந்திய, தமிழ் இலக்கியத்தில் எங்கும் பதிவாகவில்லை என்றார் புலம் பெயர்ந்த தமிழரும், மலேசிய மருத்துவரும், எழுத்தாளருமான டாக்டர் சண்முகசிவா.

தாயகம் கடந்த தமிழ் என்ற தலைப்பில் உலகத்தமிழ் எழுத்தாளர்கள் 3 நாள் மாநாடு கோவையில் திங்கள்கிழமை கே.எம்.சி.எச். மருத்துவமனை கலையரங்கில் தொடங்கியது.

நிகழ்ச்சியின் 2-ம் நாள் செவ்வாய்க்கிழமை தாயகம் கடந்த தமிழ் ஓர் அறிமுகம், தாயகம் பெயர்தல் வலியும்; வாழ்வும், புதிய சிறகுகள், தமிழ்கூறும் ஊடக உலகம் என்ற தலைப்புகளில் 4 அமர்வுகள் நடைபெற்றன.

அவற்றுக்கு முறையே ரெ.கார்த்திகேசு, மாலன், சிற்பி பாலசுப்பிரமணியம், நாகரத்தினம் கிருஷ்ணா ஆகியோர் தலைமை வகித்தனர். மலேசியா கிருஷ்ணன் மணியம், சிங்கப்பூர் சீதாலட்சுமி, அமெரிக்கா நாகரத்தினம் கிருஷ்ணா, மருதநாயகம், ஆஸ்திரேலியா எஸ்.பொன்னுதுரை, மலேசியா சண்முக சிவா, கனடா சேரன், இலங்கை அனார் உள்பட 16க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் பேசினர்.

2ம் அமர்வில் தலைமை வகித்து எழுத்தாளரும், பத்திரிகையாளருமான மாலன் பேசுகையில், 'இலக்கியத்திற்கு வாழ்வும், வலியும், மொழியும் அவசியம். இவை இல்லாத இலக்கியங்கள், இலக்கியங்களே அல்ல. அந்த வலியையும், வாழ்வையும், தன் தாய் மொழியின் மீதான நேசத்தையும் முழுமையாக வெளிபடுத்துபவையாக இருக்கின்றன புலம் பெயர்ந்த தமிழர்களின் படைப்புக்கள் என்றார்.

அ.முத்துலிங்கம், கனடாவிலிருந்து வர இயலாத காரணத்தால் அவருடைய உரை காணொளி காட்சி மூலம் பகிரப்பட்டது. மலேசிய எழுத்தாளர் சண்முக சிவா பேசியது:

நேதாஜி மலேசியா வந்தபோது, அவரிடம் மலேசிய தமிழர்கள் நகை, பொருள் பணத்தை அள்ளிக் கொடுத்தனர். தன் தாய்த் திருநாடு, ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற உந்துதலே அதற்குக் காரணம். அது இந்திய, தமிழ் இலக்கியத்தில் எங்கும் பதிவு செய்யப்படவில்லை.

பாரதம் விடுதலை பெற வேண்டும் என்பதற்காக நேதாஜி எப்படி நாடு நாடாகச் சென்றாரோ, அதுபோல நாடுகடந்து நாடு சென்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் தேச விடுதலைக்காக வெளியிலிருந்து போராடியிருக்கின்றனர்.

தேச விடுதலைக்கு ஜப்பான்காரன் காரணமாக இருப்பான், வாழ்க்கைக்கு உத்தரவாதம் தருவான், ஆங்கிலேயனை விரட்டியடிப்பான் என்று கண்மூடித்தனமாக நேதாஜி மூலமாக அங்குள்ள தமிழர்கள் நம்பினர். சயாம் ரயில்வே பணிக்கு அங்கிருந்து ஆட்களை கொண்டு சென்று, அதில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்தபின்புதான் ஜப்பானுக்கு எதிரான எண்ணம் வந்தது. அந்த உயிர்ப்பலிகள், நேதாஜி மீது நம் மக்கள் வைத்திருந்த பற்று எதுவுமே இங்குள்ள மக்களால் நன்றி கூறப்படவில்லை.

மலேசிய தமிழர்கள் இன்னமும் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களையே நம்பியுள்ளனர். இது நமது மண். மதுரை எனது சொந்த ஊர். அந்த ஊர்தான் என்னை மருத்துவர் ஆக்கியது. எங்கேபோனாலும் பிணைக்கிறது மண்ணும், மண்ணின் மொழியும்தான்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x