தமிழகத்தில் வலிமையான கூட்டணி அமைக்க முயற்சி- இல.கணேசன் பேட்டி

தமிழகத்தில் வலிமையான கூட்டணி அமைக்க முயற்சி- இல.கணேசன் பேட்டி
Updated on
1 min read

தமிழகத்தில் திமுக, அதிமுக அல்லாத வலிமையான கூட்டணி அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.

கிருஷ்ணகிரியில் திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சென்னை வண்டலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசும்போது, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை மறு எண்ணிக்கை அமைச்சர் எனக் குறிப்பிட்டார்.

அதற்கு பதில் கொடுத்துள்ள ப.சிதம்பரம், அவர்தான் மறு எண்ணிக்கை கோரியதாகவும், ஆனால் மறு எண்ணிக்கை நடக்க வில்லை எனவும் தெரிவித்துள்ளார். வெற்றி பெற்ற வேட்பாளர் எதற்காக மறு எண்ணிக்கை கோர வேண்டும். காலையில் தோற்று, மாலையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். நாங்கள் அவரை இனி ‘காலையில் தோற்று, மாலையில் வெற்றி பெற்ற அமைச்சர்’ என்றே அழைப்போம்.

தமிழகத்தில் திமுக, அதிமுக அல்லாத கட்சிகளுடன் கடந்த இரு மாதங்களாக அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நடத்தினோம். சில கட்சிகளுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் நடத்தினோம். இதற்கிடையில், மோடி சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டதால், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தையை சுமுகமாக முடித்து, ஒரே மேடையில் அனைத்துத் தலைவர்களையும் அமர வைத்து, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கலாம் என வியூகம் வகுத்தோம். ஆனால், அதில் முடிவு எட்டப்படவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், இனி கூட்டணி பற்றி பாஜக அவசரம் காட்டாது.

பாமக.வுடனும் பேச்சுவார்த்தை

தமிழகத்தில் திமுக, அதிமுக அல்லாத வலிமையான கூட்டணி அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கூட்டணியில் தேமுதிக வருவது தொடர்பாக சாதகமான பதில் கிடைத்துள்ளது. பாமக-வுடன் தொடர்ந்து அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான மோத லாகும். எனவே, திமுக மற்றும் அதிமுக-வை விமர்சிக்கும் வகையில், பிரச்சார வியூகம் வகுக்க மாட்டோம்.

3-வது அணியை புறக்கணிக்க வேண்டும்

மூன்றாவது அணி அமைவதற் கான வாய்ப்பு குறைவு. அவ்வாறு அமைந்தாலும் பிரதமராக யாரைத் தேர்வு செய்வார்கள்? மூன்றாவது அணி அமைந்து, வெற்றியும் பெற்றால் நாட்டின் நிலை மிகவும் பரிதாபத்துக்குள்ளாகிவிடும். எனவே, மக்கள் மூன்றாவது அணி யைப் புறக்கணிக்க வேண்டும்.

பாஜக-வை தோல்வியடையச் செய்வதற்காக சோனியா காந்தியின் ஆலோசனைப்படியும், அமெரிக்காவின் ஆதரவோடும் தொடங்கப்பட்டது ஆம் ஆத்மி கட்சியாகும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in