

மாட்டுக்கறி விருந்து வைத்த சென்னை ஐஐடி மாணவரைத் தாக்கிய மாணவர்களையும், அவர்களைப் பாதுகாக்கும் ஐஐடியின் நிர்வாகத்தினரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''சென்னை ஐஐடி மாணவர் சூரஜ்ஜை, மனீஷ் உள்ளிட்ட எட்டு மாணவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் சூரஜ்ஜின் வலது கண் பார்வையே போய்விடும் நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் இருக்கிறார்.
இதனைக் கண்டித்து, மனீஷ் உள்ளிட்ட எட்டு மாணவர்களையும் குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு ஐஐடி டீனை வலியுறுத்தி ஐஐடி வளாகத்திற்குள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்; இதனைச் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்கின்றனர்.
இதே கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் ஐஐடி முன் போராட்டம் நடத்தினர். அப்போது காவலர்கள் அவர்களைத் தாக்கி கைது செய்தனர். அப்போது ஒரு மாணவியின் கையைக் காவலர் ஒருவர் வளைத்து ஒடிக்கும் கொடூரக் காட்சி தொலைக்காட்சியில் வெளியானது. இத்தகைய மிருகத்தனம் காவல்துறையிடமிருந்து வெளிப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் திகிலையும் ஏற்படுத்துகிறது.
மனித உரிமைக்கு எதிரான இந்த மிருகவெறிச் செயலில் ஈடுபட்ட அந்தக் காவலரை உடனடியாக கைது செய்து நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
“இறைச்சிக்காக மாட்டை விற்கக்கூடாது” என்ற மத்திய அரசின் உத்தரவைக் கையில் எடுத்தே மனீஷ் உள்ளிட்டவர்கள் சூரஜ்ஜை தாக்கியிருக்கிறார்கள்.
இதை ஐஐடி டீனும் ஆதரிக்கிறார் என்பது, இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட மனீஷ் உள்ளிட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அவரே தடையாய் இருப்பதிலிருந்து தெரியவருகிறது.
இதில் மனீஷும் தாக்கப்பட்டதாகக் காட்ட, அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது போல் கட்டுப் போடவைத்து மருத்துவமனையில் படுக்க வைக்கப்பட்டிருக்கிறார்; ஆனால் மனீஷோ எந்த பாதிப்பும் ஏற்படாதவராக உற்சாகத்துடன் சிரித்தபடியே மருத்துவமனை படுக்கையில் இருப்பதை தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது.
சூரஜ்ஜைத் தாக்கிய மனீஷ் உள்ளிட்ட எட்டு மாணவர்களுடன் அவர்களின் குற்றச் செயலை ஆதரித்து அவர்களைப் பாதுகாத்து வரும் ஐஐடி நிர்வாகத்தினரையும் உடனடியாகக் கைது செய்து குற்றவியல் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது.