

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பினாமி அரசால் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட சிறப்பான திட்டங்கள் முடங்கியுள்ளன என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் பொதுக்கூட்டம் தஞ்சாவூரில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா திறந்தவெளி மாநாடாக ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க, விரும்பத்தகாக பல செயல்கள் நடந்தாலும் அண்ணா வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் இந்த தர்மயுத்தத்தை நடத்தி வருகிறோம்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் இந்த இயக்கத்தை மக்கள் இயக்கமாக நடத்தினர். ஆனால், இப்போது தாயில்லாத பிள்ளை போல இந்த இயக்கம் உள்ளது.
75 நாட்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது என்ன நடந்தது, ஏன் அவரை குணப்படுத்தவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டிய கடமை தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பினாமி அரசுக்கு இருக்கிறது. ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை. இந்த பினாமி அரசால், ஜெயலலிதா தொடங்கிய சிறப்பான பல திட்டங்கள் முடங்கியுள்ளன என்றார்.
கூட்டத்துக்கு தம்பிக்கோட்டை எம்.கே.செந்தில் தலைமை வகித்தார். முன்னாள் மாநகர மேயர் சாவித்ரி கோபால் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மூவேந்தர் முன்னணி கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியில் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது.