

பக்ரீத் திருநாளையொட்டி, திமுக தலைவர் கருணாநிதி இன்று வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
அந்தச் செய்தியில், “தியாகத் திருநாள் எனப் போற்றப்படும் பக்ரீத் பெருநாள் இஸ்லாமிய மக்களால் 16.10.2013 அன்று எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. ஈத்-உல்-அஸா என்னும் நோன்பைக் குறிக்கும் இந்தப் பக்ரீத் பெருநாள், 'கடமையைச் செய்வதாலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது' என்பதை உணர்த்தும் நன்னாளாகும்.
“கெட்டவைகளைப் பார்க்காமல் உங்கள் கண்களைக் கட்டுப்படுத்துங்கள்; கெட்ட செயல்களை விட்டும் உங்கள் கைகளை கட்டுப்படுத்துங்கள்; பொய்களை விட்டு உண்மை பேசுவதில் முனையுங்கள்” என்று ஒவ்வொரு மனிதனுக்கும் - அவன் நல்லவனாக வாழ்வதற்கு உரிய போதனைகளைக் கூறினார் நபிகள் நாயகம்.
நபிகள் நாயகத்திடம் ஒரு மனிதர், “இஸ்லாமில் சிறந்தது எது?” என்று கேட்க; அதற்கு அவர்கள், “ஏழைகளுக்கு உணவளித்தல்; நீங்கள் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் கூறுதல்” என்றார்கள். ஏழைகளுக்கு உணவளித்தல் மூலம் இரக்க உணர்வும், எளியோரை அரவணைக்கும் பெருந்தன்மையும் வளரும்; சலாம் கூறுவதன் மூலம் இதயங்கள் இணையும்; மனித மனங்களில் நேச ஊற்றுகள் பொங்கிப் பெருகும். அது தனிமனித வாழ்விலும், சமூகத்திலும் மனத் தூய்மையையும், நெருக்கத்தையும், சமுதாயத்தில் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் என்கிறது இஸ்லாம் நெறி.
இந்த நெறி தழைக்க, எங்கும் மனிதநேயம் செழிக்க, எளியோர் ஏற்றம் பெற உதவிடுவோம்; எல்லோரிடமும் இன்முகம் காட்டி, இன்சொல் கூறி இதயங்கள் இணைந்து இன்புற ஏற்ற வழி நடப்போம் என இத்திருநாளில் ஏற்கும் உறுதியுடன்; இஸ்லாமிய சமுதாய மக்களிடம் தொடர்ந்து அன்பு செலுத்திவரும் தி.மு.கழகத்தின் சார்பில் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் முஸ்லீம் மக்கள் அனைவருக்கும், எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.