

சென்னை மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தை வண்ணாரப்பேட்டை யில் இருந்து திருவொற்றியூர் விம்கோநகர் வரை நீட்டிக்கும் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் விழா மலரை வெளியிட்டு வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான 9.051 கி.மீ. தொலை வுக்கு மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டப் பணிகள் ரூ.3,770 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் வழங்கியது. இத்திட்டத்தால் வடசென்னை பகுதி மக்கள் மிகவும் பயன்பெறுவர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன முதல் கட்ட திட்டப் பணி களுக்கு மத்திய அரசு இது வரை ரூ.10 ஆயிரம் கோடி வழங்கி யுள்ளது. இந்தியாவில் டெல்லி, குர்காம், கொல்கத்தா, ஜெய்ப்பூர், பெங்களூர், மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் 316 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படுகிறது.
கொல்கத்தா, சென்னை, ஜெய்ப்பூர், அகமதாபாத், நாக்பூர், மும்பை ஆகிய நகரங்களில் 525 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. 553 கி.மீ. மெட்ரோ ரயில் திட்டம் பரிசீலனை யில் உள்ளது. சமீபகாலமாக சர்வதேச பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி பிரகாசமாகவே இருக்கிறது. நாட்டின் வளர்ச்சியே பிரதமர் நரேந்திர மோடியின் தாரக மந்திரமாக இருக்கிறது.
முதல்வர் ஜெயலலிதா தலைமை யில் தமிழக அரசு சிறப்பாக செயல் படுகிறது. நாட்டில் சிறப்பாக செயல் படும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவி களையும் மத்திய அரசு செய்யும்.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.