தூத்துக்குடி - சென்னை இடையே பிப். 20 முதல் 3-வது விமான சேவை

தூத்துக்குடி - சென்னை இடையே பிப். 20 முதல் 3-வது விமான சேவை
Updated on
1 min read

தூத்துக்குடி- சென்னை இடையே மூன்றாவது விமான சேவை வரும் 20-ம் தேதி தொடங்குகிறது.

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் கடந்த 1992-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. 14 ஆண்டுகளாக பெரிய அளவில் பயன்படாமலேயே இருந்து வந்தது. இடையில் இரண்டு தனியார் நிறுவனங்கள் சென்னைக்கு விமான சேவையைத் தொடங்கி, வெற்றி பெறாததால் சில மாதங்களிலேயே நிறுத்திக் கொண்டன.

கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி `ஏர் டெக்கான்’ நிறுவனம் தூத்துக்குடி- சென்னை இடையே விமான சேவையைத் தொடங்கியது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதில் இருந்து, இன்று வரை தூத்துக்குடி- சென்னை விமான சேவை வெற்றிகரமாக நடந்து வருகிறது. ஏர்டெக்கான் நிறுவனத்தை கிங்பிஷர் நிறுவனம் வாங்கியதால், சில ஆண்டுகள் தூத்துக்குடி- சென்னை இடையே கிங்பிஷர் விமான சேவை நடந்து வந்தது. பின்னர் கிங்பிஷர் நிறுவனம் நஷ்டமடைந்ததால் அந்த நிறுவனம் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. இதையடுத்து, தூத்துக்குடி- சென்னை விமான சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தொடங்கியது.

தினமும் ஒரு சேவையை நடத்தி வந்த ஸ்பைஸ் ஜெட், தற்போது தினமும் காலை, மாலை என இரு நேரங்களில் தூத்துக்குடி- சென்னை இடையே விமான சேவையை நடத்தி வருகிறது.

முதல் விமானம் காலை 8.55 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி காலை 10.20 மணிக்கு தூத்துக்குடி வருகிறது. பின்னர் 10.20 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து கிளம்பி பகல் 12 மணிக்கு சென்னை போய் சேருகிறது.

2-வது விமானம் பிற்பகல் 1.15 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி 2.40 மணிக்கு தூத்துக்குடி வருகிறது. பின்னர் மாலை 3 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து கிளம்பி 4.30 மணிக்கு சென்னை சேர்கிறது.

3-வது சேவை

பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதையடுத்து, கோவையை சேர்ந்த `ஏர் கார்னிவல்’ நிறுவனம், வரும் 20-ம் தேதி முதல் தூத்துக்குடி- சென்னை இடையே புதிய விமான சேவையைத் தொடங்குகிறது. இந்த விமானம் தினமும் பிற்பகல் 2.25 மணிக்கு சென்னையில் புறப்பட்டு மாலை 3.50 மணிக்கு தூத்துக்குடி வரும். பின்னர் 4.15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மாலை 5.50 மணிக்கு சென்னையைச் சென்றடையும். 72 பயணிகள் பயணிக்கும் வகையில் `ஏடிஆர்-72’ ரக விமானத்தை இந்நிறுவனம் இயக்குவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணிகள் மகிழ்ச்சி:

தூத்துக்குடி- சென்னை இடையே மூன்றாவது விமான சேவை தொடங்கப்படுவது தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட தொழில்முனைவோர், வர்த்தகர்கள், வணிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in