

நெடுஞ்சாலைகளில் எழுதப்பட்டுள்ள இந்தி பெயர்களை அகற்றாவிட்டால், மிகப்பெரிய போராட்டத்தை பாமக நடத்தும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதைப் போன்று தமிழகத்தில் நிலவும் குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்தி இந்தியைத் திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது.
வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் ஊர் பெயர்கள் எழுதப்படுவது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தின் மிகவும் முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிடத்தக்கவை 75 மற்றும் 77 எண் கொண்ட சாலைகளாகும். இவற்றில் தேசிய நெடுஞ்சாலை 75 கர்நாடகத்தின் வழியாக செல்லும் 73-வது எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையையும், சென்னை - பெங்களூர் இடையிலான 48-வது எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையையும் வேலூரில் இணைக்கிறது.
இந்த சாலையின் மொத்த நீளம் 533 கி.மீ ஆகும். அதேபோல் தேசிய நெடுஞ்சாலை 77 கிருஷ்ணகிரி, திண்டிவனம் நகரங்களை இணைக்கிறது. இந்த சாலைகளில் உள்ள ஊரின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன.
ஆனால், கடந்த சில வாரங்களாக இந்த சாலைகளில் ஆங்கிலத்தில் உள்ள ஊர் பெயர்களை அழித்து விட்டு, இந்தியில் எழுதும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த சில வாரங்களில் சாலைகளிலுள்ள ஊர்களின் பெயர்களை இந்திமயமாக்கும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள ஊர்களின் பெயர்களை இந்தியில் எழுதுவது தமிழகத்தில் இந்தி திணிக்கப்படாது என்று மத்திய அரசின் சார்பில் பலமுறை அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு எதிரான செயல் என்பது மட்டுமின்றி, அந்த சாலைகள் வழியாக செல்லும் வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலா பயணிகளின் நலன்களுக்கு எதிரான செயலாகும்.
இச்சாலைகள் அனைத்திலும், அனைத்து ஊர்களிலும் இந்தியில் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. இதுதவிர தமிழகத்தில் தமிழிலும், ஆந்திரத்தில் தெலுங்கிலும், கர்நாடகத்தில் கன்னடத்திலும் ஊர் பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனை, தோல் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்களுக்கு மைல்கற்களில் எழுதப்பட்டுள்ள எந்த மொழியும் தெரியாது என்பதால் அவர்கள் எந்த ஊரை நோக்கிச் செல்கிறோம் என்பது தெரியாமல் தடுமாறுகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தி மொழியை திணிக்கும் செயல்களில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு முறை இந்தித் திணிப்பு நடத்தப்படும் போதும் அதை எதிர்த்து போராட்டம் நடத்தப்படுவதும், அதைத் தொடர்ந்து அகற்றப்படும் இந்தி எழுத்துக்கள் அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் முளைப்பதும் வாடிக்கையாகி விட்டன.
தேசிய நெடுஞ்சாலைகள் 75 மற்றும் 77-ல் இந்தியில் பெயர் எழுதும் முடிவு உள்ளூர் அளவில் எடுக்கப்பட்ட முடிவாகத் தெரியவில்லை. மாறாக, மத்திய அரசு எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில் தான் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த ஊர் பெயர்கள் இந்தியில் மாற்றப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன்மூலம் இது மத்திய அரசின் திட்டமிட்ட இந்தித் திணிப்பு என்பது தெளிவாகிறது.
மத்திய அரசுத் துறைகளுக்கு சொந்தமான சமூக ஊடகக் கணக்குகளில் இந்தியில் மட்டுமே கருத்துக்களை பதிவிட வேண்டும் என்று ஆணையிட்டதன் மூலம் இந்தியைத் திணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முயன்றது, அதன்பின் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் சமஸ்கிருத வாரத்தை கொண்டாட வேண்டும்; ஆசிரியர் நாளை குரு உத்சவ் ஆக கடைபிடிக்க வேண்டும் என்பன போன்ற உத்தரவுகளின் மூலம் சமஸ்கிருதத்தை திணிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது,
பல்கலைக்கழகங்களின் மூலம் இந்தியை திணிக்கத் துடித்தது, உள்ளூர் பண்பலை வானொலிகளிலும் இந்தி நிகழ்ச்சிகளை திணித்தது என இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி & சமஸ்கிருத திணிப்பு முயற்சிகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
பல்வேறு இன, மொழி பேசும் மக்கள் வாழும் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மொழியை திட்டமிட்டு திணிப்பது முறையல்ல. எனவே, நெடுஞ்சாலைகளில் எழுதப்பட்டுள்ள இந்தி பெயர்களை அகற்றும்படி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். இல்லாவிட்டால், தமிழக மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பாமக நடத்தும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.