Published : 31 Oct 2014 11:04 AM
Last Updated : 31 Oct 2014 11:04 AM

திருமணம் செய்வதாக 11 பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது: மேட்ரிமோனி மூலம் தேர்ந்தெடுத்து மோசடி

திருமண இணையதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு, திருமணம் செய்வதாக கூறி 11 பெண்களிடம் பணம், நகை, கார் மோசடி செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், "நான் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறேன். சென்னை அயனாவரத்தை சேர்ந்த பாலமணிகண்டன் (27) என்பவர் திருமண இணையதள சேவை மூலம் எனக்கு அறிமுகம் ஆனார். பின்னர் நன்கு பழக்கமானதன் பேரில், இருவரும் காதலித்தோம். இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் இருந்து வந்தோம். பின்னர் பாலமணிகண்டன் என்னிடம் சிறிது சிறிதாக நகைகளை கேட்டதன்பேரில், சுமார் 80 சவரன் தங்க நகைகளை கொடுத்தேன்.

இந்நிலையில் என்னுடனான தொடர்பை துண்டித்துவிட்டு வேறு பெண்ணிடம் பழகி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

டி.பி.சத்திரம் போலீஸார் நடத்திய விசாரணையில், பாலமணிகண்டன் ஐபிஎஸ் அதிகாரி போல நடித்து வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பண மோசடி செய்த வழக்கில் 2013-ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர் என்பது தெரிந்தது. பாலமணிகண்டனை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்தது தெரிந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "பால மணிகண்டனின் தந்தை வேணுகோபால் ரயில்வேயில் வேலை செய்கிறார். அயனாவரம் பழனி ஆண்டவர் கோயில் தெருவில் பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். திருமண இணைய தளங்களில் டாக்டர், இன்ஜினீயர் பெண்கள் தேவை என விளம்பரம் கொடுத்து, அதில் தொடர்பு கொள்ளும் பல பெண்களிடம் பழகி பலரிடம் பணம், நகை, கார் போன்றவற்றை மோசடி செய்திருப்பது தெரிந்தது.

2 டாக்டர், 3 பொறியியல் படித்த பெண்கள் உட்பட 11 பெண்களை பாலமணிகண்டன் ஏமாற்றியுள்ளார். முதலில் இணையதளம் மூலம் தகவல்களை பரிமாறி, பின்னர் நேரில் சந்தித்து பெண்களுக்கு பிடிக்கும் வகையில் பேசி, அவர்களின் நம்பிக்கையை முதலில் பெற்றுவிடுவார்.

அதன் பின்னர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி சிலரை பதிவுத் திருமணம் செய்து கொண்டு அவர்களை ஏமாற்றியும், மிரட்டியும் பணம் மற்றும் நகைகளை வாங்கியிருக்கிறார். சுமார் 200 சவரன் நகைகளை பாலமணிகண்டன் மோசடி செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

அவரிடம் இருந்து தற்போது 66 சவரன் நகைகள், ஒரு கார், ரூ.6 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாலமணிகண்டன் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x