மோடிக்கு எதிர்ப்பு: சென்னை மாணவர்கள் போராட்டத்தில் தடியடி

மோடிக்கு எதிர்ப்பு: சென்னை மாணவர்கள் போராட்டத்தில் தடியடி
Updated on
1 min read

சென்னை பல்கலைக்கழகத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உரையாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள், சென்னையின் பல்வேறு இடங்களில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

வகுப்பு வாத சாயம் கொண்ட அரசியல்வாதிகளுக்கான இடமாக, கல்வி நிறுவனங்கள் இருக்கக் கூடாது என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.

சென்னை வந்தார் மோடி

குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி இன்று பிற்பகல் சென்னை வந்தார். அவரது வருகையையொட்டி, நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், தமிழிசை சவுந்திரராஜன் உள்பட முக்கிய நிர்வாகிகள் மோடியை வரவேற்றனர். அதைத் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் நரேந்திர மோடி பேசினார். இதற்காக விமான நிலையம் அருகே சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது.

பின்னர், மாலை 6 மணிக்கு சென்னை பல்கலைக்கழக அரங்கத்தில் நடைபெறும் விழாவுக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு நானிபல்கிவாலா அறக்கட்டளை சார்பில் நடைபெறும் விழாவில் சிறப்புரையாற்றுகிறார்.

அந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்சோரி எழுதிய நூலையும் நரேந்திர மோடி வெளியிடுகிறார். விழா முடிந்ததும் இரவு 9 மணிக்கு தனி விமானத்தில் குஜராத் புறப்பட்டு செல்கிறார்.

மோடி நிகழ்ச்சிக்கு எதிரான மனு தள்ளுபடி

இதனிடையே, சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெறும் நரேந்திர மோடி நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

'நரேந்திர மோடி ஓர் இந்து அடிப்படைவாதி. பல்வேறு மதத்தினர் பயிலும் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தினுள் அவர் உரையாற்ற அனுமதிக்கக் கூடாது. ஏற்கெனவே டாக்டர் அமினா வாதுத் நிகழ்ச்சிக்கான அனுமதியை ரத்து செய்தது போலவே, அதே அளவுகோலின்படி நரேந்திர மோடி நிகழ்ச்சிக்கான அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும்' என்று தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தங்க தமிழ்வேலன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வருவதால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு கெடுபிடிகளைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதும் கவனத்துக்குரியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in