

கழிவுநீரை சுத்திகரித்து, மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படுவதாக சலவை, சாயப்பட்டறை உரிமையாளர்கள் தெரிவித்தாலும், மக்களோ, விவசாயிகளோ அதை நம்புவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதற்கு சாயப்பட்டறை உரிமையாளர்கள் என்ன பதில் கூறுகிறார்கள்?
திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.நாகராஜ் கூறியது: 1980-ல் ஒரு கிலோ துணிக்கு சாயமேற்ற 150 லிட்டர் நீர் தேவைப்பட்டது. தற்போதுள்ள தொழில்நுட்பத்துக்கு 30 லிட்டர் போதும். ரூ.3,581 கோடி ஏற்றுமதி வர்த்தகம் நடந்தபோது, 500 சாயப்பட்டறைகள் இருந்தன. தற்போது ரூ.23 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடக்கிறது. 480 சாய ஆலைகள்தான் உள்ளன. இதுதவிர, ரூ.13 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு வர்த்தகமும் நடக்கிறது.
மேலும், ஈரோடு, பெங்களூரு சந்தைகளில் சுமார் ரூ.10 ஆயிரம் கோடிக்கு திருப்பூர் உள்ளாடைகள் விற்பனையாகின்றன. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் வணிகம் முழுவதும் கணக்கில் வரும். வர்த்தகர்கள் அனைத்து வரிகளையும் செலுத்தியே மூலப் பொருட்களை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், சட்டவிரோதமாக, ரசீது இல்லாமல் பொருட்களை வாங்கும் சாய ஆலைகள்தான், ஆற்றில் சலவை, சாயக் கழிவுகளை விடுகின்றன. இதனால், நேர்மையாக தொழில் செய்வோருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சட்டவிரோதமாக செயல்படும் சாய ஆலைகள் இனி சட்டத்துக்கு உட்பட்டே செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அனைவருமே பொது சுத்திகரிப்பு நிலையத்தில் இணைந்தோ, தனி சுத்திகரிப்பு நிலையம் அமைத்தோ கழிவுநீரை ‘ஜீரோ டிகிரி டிஸ்சார்ஜ்’ செய்தே ஆக வேண்டும். இதனால் காவிரி, நொய்யல், பவானியில் நீர் மாசு குறைந்துவிடும்.
தீவிர கண்காணிப்பு
உயர் நீதிமன்ற உத்திரவுப்படி 751 சாயப்பட்டறைகள் மூடப்பட்டதில், 18 பொதுசுத்திகரிப்பு நிலையத்துடன் இணைப்பு பெற்ற 380 தொழிற்சாலைகள் மட்டும் 2012-ல் இயங்க அனுமதிக்கப்பட்டன. அவற்றிலும் 50 சதவீத இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 70 சாயப்பட்டறைகள் தனி சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்த பின்னரே அனுமதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 450 சாயப்பட்டறைகள் தற்போது இயங்கினாலும், 50 சதவீத இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால், முழு அளவில் செயல்படுவதில்லை.
இந்த ஆலைகளின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எவ்வளவு செல்கிறது? மறுசுழற்சிக்குப் பிறகு எவ்வளவு நீர் வெளிவருகிறது? இந்த காலகட்டத்தில் சாயம் ஏற்றப்பட்ட துணிகள் எவ்வளவு? என்பது குறித்தெல்லாம் தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதை பரிசோதிக்கிறார்கள்.
15 ஆண்டுகளுக்கு முன் வரை சவ்வூடு பரவல் தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கின. தற்போது, பயோலாஜிக்கல் ட்ரீட்மென்ட் முறையில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. மாட்டுச் சாணத்தில் உருவாகும் நுண்ணுயிரிகள் சாயத்தை சாப்பிடக் கூடியவை. எனவே, பிரம்மாண்ட தொட்டிகளில் மாட்டுச்சாணக் கரைசலை தேக்கி, நுண்ணுயிரிகளை வளர்க்கிறோம். அதில் செலுத்தப்படும் கழிவுநீரில் உள்ள சாயத்தை நுண்ணுயிரிகள் சாப்பிட்டுவிடுகின்றன. அடுத்து வரும் நீரில் உள்ள உப்பு ஆவியாக்கப்படுகிறது. இதன்மூலம் 85 சதவீதம் நல்ல நீர் கிடைக்கிறது. எஞ்சியுள்ள 15 சதவீத நீரில் உப்புத்தன்மை 70 ஆயிரம் டிடிஎஸ் உள்ளது. அதையும் கொதிநிலையில் ஆவியாக்கிய பின்னர், மீதியுள்ள தண்ணீர் கிரிஸ்ட்டிலைசர் வடிவில் வந்து, ஃபெரஸ் லைம், மிக்ஸ்டு சால்ட் என 2 வகையிலான உப்புகளைத் தருகிறது.
‘ஃபெரஸ் லைம்’ உப்பை சிமென்ட் ஆலைகள் வாங்கிக் கொள்கின்றன. கலவையாக கிடைத்த உப்புக் கட்டிகள் சோடியம் சல்பேட்டாக மாற்றப்படுகிறது. சாயத்தை துணிக்கு நன்றாக ஒட்டும்படி செய்வது இந்த உப்புதான். எனவே, இந்த உப்பை மீண்டும் சாயமேற்றவும், துணிகளை சலவை செய்யவும் பயன்படுத்துகிறோம்.
கழிவுநீர்த் தொட்டிகளில் நுண்ணுயிரிகளை உற்பத்தி செய்யும் மாட்டுச் சாணக் கழிவுகளுக்கு எரியும் தன்மை உள்ளது. மறுசுழற்சியில் உப்புத் தண்ணீரை கொதிக்க வைக்க இந்த எருவைப் பயன்படுத்துகிறோம்.
அங்கீகாரமற்ற ஆலைகள்
அங்கீகாரம் இல்லாத சாய, சலவைப் பட்டறைகளின் கழிவுகள், கோவை, திருப்பூர் மாநகரின் சாக்கடைக் கழிவுகள்தான் ஆற்றில் கலக்கிறது. சாயக்கழிவு நீரில் நுரை வராது. வீட்டில் பயன்படுத்தப்படும் சலவை சோப்புகளில் ‘பிளமின்டைன் பாக்டீரியாக்கள்’ உள்ளன. சாக்கடைக் கழிவுநீர் செல்லும் வழியில் இவை தங்கி, மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தோடும்போது இவை நுரையாகப் பொங்குகின்றன. இதைத்தான் சாயக்கழிவு என்று தவறாகக் கருதுகிறார்கள்.
2007-ல் ஆற்றில் எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் 5,700 டிடிஎஸ் உப்புத்தன்மை இருந்ததால், சாயப் பட்டறைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது, 2,000 முதல் 3,000 டிடிஎஸ் அடர்வுகொண்ட நீரே ஆற்றில் செல்கிறது. சாய ஆலைகள் கழிவு 98 சதவீதம் ஆற்றுக்குச் செல்வதில்லை. மீதமுள்ள 2 சதவீதம் கூட அனுமதியற்ற சாய ஆலைகள் வெளியிடுவதுதான். திருப்பூர் மாநகராட்சியில் ஆற்றில் கலக்கவிடப்படும் சுமார் 2.80 கோடி லட்சம் லிட்டர் கழிவுநீரில் 2,000 முதல் 3,000 டிடிஎஸ் வரை உப்புத்தன்மை உள்ளது.
முன்பு ஒரு லிட்டர் சாயக்கழிவு நீரை சுத்திகரிக்க 32 பைசா செலவானது. தற்போது 18 பைசா மட்டுமே செலவாகிறது. நவீன உபகரணங்கள், புதிய தொழில்நுட்பம் மூலம் செலவைக் குறைத்துள்ளோம்.
மேலும், ‘மல்டி ஸ்பெஷாலிட்டி பாய்லர்’ மூலம் கழிவுநீரைச் சுத்திகரித்து, அதன் மூலம் ‘டர்பைன் பவர் ஜெனரேசன்’ முறையில் மின்சாரம் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளோம். இதனால், மின்சார செலவும் மீதமாகும். ஜீரோடிகிரி டிஸ்சார்ஜ் என்பதை செலவில்லாமல் செய்யும் நிலையை ஓராண்டில் அடைவோம்.
தண்ணீர் தேவை குறைவு
திருப்பூர் 3-வது குடிநீர்த் திட்டம் மூலம் 80 சதவீதம் தண்ணீர் தொழிற்சாலைகளுக்கும், 20 சதவீதம் குடிநீர்த் தேவைக்கும் வழங்கப்படுகிறது. அதில் எங்களுக்கு இப்போது 20 சதவீத தண்ணீர்தான் தேவை. அதிலும் ஒரு கோடி லிட்டர் நீரை மறுசுழற்சியில் மீண்டும் தொழிற்சாலைக்கே கொண்டுசெல்கிறோம்.
‘லாஸ் ஆஃப் எக்காலஜி’யின் ஆய்வுப்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நஷ்டஈடு ரூ.14 கோடி, நீதிமன்ற அபாரதம் ரூ.62 கோடி, அணையைச் சுத்தப்படுத்த ரூ.8 கோடி என மொத்தம் ரூ.84 கோடியை 5 ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றத்தில் செலுத்திவிட்டோம். அது தற்போது வட்டியோடு ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது. அதேபோல, சாயக் கழிவுநீரை ஆற்றில் விடக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை தவறாது கடைப்பிடிக்கிறோம் என்றார்.
பொது சுத்திகரிப்பு நிலையம் எவ்வாறு செயல்படுகிறது?
திருப்பூரில் இயங்கும் 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான அருள்புரம் சுத்திகரிப்பு நிலையம் 7 ஏக்கரில், 55 லட்சம் முதல் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய, சிறிய தொட்டிகளுடன் அமைந்துள்ளது. இங்கு, பெரிய தொட்டியில் உள்ள சாணக் கரைசலுடன் சாயக் கழிவுநீர் கலக்கப்பட்டு, அடுத்த தொட்டிக்கு கொண்டுசெல்லப்படுகிறது. பல்வேறு நிலைகளுக்குப் பிறகு வரும் நீர், சாயமற்ற நிலையில் உள்ளது.
அவை பிரம்மாண்ட பாய்லர்களில் கொதிக்கவைக்கப்பட்டு, மீண்டும் குளிர்விக்கப்பட்டு கூம்பு வடிவிலான பீப்பாய்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் கம்ப்யூட்டர்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. அதேபோல, கழிவுநீரைச் சுத்திகரிக்கும்போது கிடைக்கும் திடக்கழிவுகளை தனியே சேகரிக்கின்றனர். இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றும் 80 பேரில் 55 பேர் பயோ-டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பொறியியல் படித்தவர்கள். இந்த மையத்தில் ஒரு மணி நேரத்தில் 2.30 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்க வசதியுள்ளதாகவும், 2 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கும்போதே சுத்தமாகி விடுவதாகவும், மீதி 30 ஆயிரம் லிட்டர் கழிவுநீர் கொதிகலனுக்குச் சென்ற பின்னர் சுத்தமாவதாகவும் பொறியாளர்கள் தெரிவித்தனர்.