ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
Updated on
2 min read

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள் வருமாறு:

பாமக நிறுவனர் ராமதாஸ்:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும். பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்களும், இளைஞர்களும் நடத்தி வரும் அறப்போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தடையை ஒதுக்கி வைத்துவிட்டு, ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பமாகும். எனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பின்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்த வேண்டும். இதற்காக மத்திய அரசும், தமிழக முதல்வர் அவர்களும், மத்திய அரசின் தமிழகப் பிரதிநிதிகளும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து மாணவ சமுதாயத்துக்கும், மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்:

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கூடியிருக்கின்ற இளைஞர்களும், மாணவ, மாணவிகளும் தமிழக முதல்வர் நம்பிக்கை அளிக்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக முதல்வர் அமைதி காப்பதைப் பார்த்தால் மாணவ, மாணவிகளின் பொறுமையை சோதிப்பதாக தெரிகிறது. தமிழக அரசே வன்முறையை தூண்டும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா:

ஜல்லிக்கட்டுக்காக ஜனநாயக ரீதியில் போராடிவரும் இளைஞர் கள் மற்றும் மாணவர்களைத் தடியடி நடத்தி கலைக்க முயல்வதும், கைது செய்வதும் கண்டிக்கத்தக்கது. இந்தப் போராட்டங்களுக்கு மதிப்பளித்து தமிழக முதல்வர் மாணவர்களின் பிரதிநிதிகளுடன் உடனே பேச்சு வார்த்தை நடத்தி ஜல்லிக்கட்டு உடனடியாக நடத்தப்படுவதற்கு வழிவகுக்க வேண்டும்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநிலத் தலைவர் எம்.முகம்மது இஸ்மாயில்:

இந்த ஆண்டு நிச்சயம் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று வாக்குறுதி அளித்த மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், வழக்கம்போல் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டு, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி யில்லை என கைவிரித்து விட்டார். தமிழர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஜல்லிக்கட்டு தடையை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பீட்டா அமைப்பை உடனே தடை செய்ய வேண்டும்.

இந்து முன்னணி (தமிழ்நாடு) நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன்:

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காக ஜனநாயக வழியில் போராடுபவர்களை கைது செய்வது, வழக்குப் பதிவு செய்வது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஜல்லிக்கட்டு போராட்டக் கள நிலைமையைத் தங்கள் உடனடி கவனத்துக்கு கொண்டு வருகின்றேன். தாங்கள் சட்ட வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து, உடனடியாக ஒரு அவசரப் பிரகடனத்தின் மூலம், கொடிய விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாடுகளை நீக்கி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டமாக நிறைவேற்றிக் கொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in