

சென்னையில் முதல் முறையாக பேட்டரி மூலம் இயங்கும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. முதல்கட்ட ஆய்வுக்காக டெல்லியில் இருந்து 10 நாட்களில் பேட்டரி பேருந்துகள் சென்னைக்கு கொண்டுவரப்படுகின்றன.
சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகம் மூலம் 806 வழித்தடங்களில் 3,700க்கும் மேற் பட்ட பேருந்துகள் இயக்கப்படு கின்றன. இதில், சாதாரண, சொகுசு, ஏசி என பல வகையான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், போதிய பராமரிப்பு இல்லாததால் மாநகரப் பேருந்துகள் சிதலமடைந்த நிலையில்தான் காட்சியளிக்கின்றன.
இதற்கிடையே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் செலவைக் குறைக்கும் வகையில் பேட்டரி மூலம் ஓடும் பேருந்துகளை சென்னையில் இயக்க, தமிழக போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துத் கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, அவர்கள் ’தி இந்து’விடம் கூறியதாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் வகையில் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் முதல்முறையாக பேட்டரி மூலம் ஓடும் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளோம். முதல்கட்டமாக டெல்லியில் இருந்து அடுத்த 10 நாட்களில் பேட்டரி பேருந்துகள் கொண்டுவரப்பட்டு, சென்னையில் அதிகாரிகள் கொண்ட குழுவினர் முழுமையாக ஆய்வு நடத்துவார்கள். அதன்பிறகு, ஓரிரு மாதங்களுக்கு இந்த பேருந்துகள் சோதனை ஓட்டம் நடத்தப்படும். சோதனை ஓட்டம் திருப்தியாக இருந்து, பாதுகாப்பு அம்சங்களும் போதிய அளவில் இருந்தால் மட்டுமே பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இந்த வகைப் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்படும். இந்த பேருந்துகளில் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் வசதி உள்ளிட்டவை இடம் பெறும் என்றனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் செலவைக் குறைக்கும் வகையில் பேட்டரி மூலம் ஓடும் பேருந்துகளை சென்னையில் இயக்க, தமிழக போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.