

ஐஏஎஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து தமிழக மாணவர்களுக்கும் நேர்முகத்தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீசஸ் (ஐஏஎஸ் தேர்வு) மெயின் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்கள் அடுத்த கட்ட தேர்வான ஆளுமைத்தேர்வை (நேர்முகத்தேர்வு) தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் மாதிரி ஆளுமைத்தேர்வும், சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டு மெயின் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு ஏப்ரல் 7-ம் தேதி பேராசிரியர் கே.எம்.பதி, ஏப்ரல் 9-ம் தேதி ஐஏஎஸ் அதிகாரி டி.உதயச்சந்திரன் ஆகியோரைக் கொண்டு ஆளுமைத்தேர்வு தொடர்பான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
மேலும், ஏப்ரல் 8 (காலை மற்றும் பிறபகல்), ஏப்ரல் 9 (பிற்பகல்), ஏப்ரல் 10 (காலை மற்றும் பிற்பகல்) ஆகிய தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மூலமாக மாதிரி ஆளுமைத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
ஆளுமைத்தேர்வில் கலந்துகொள்ள டெல்லி செல்லும் தமிழக மாணவர்களுக்கு பயணப்படியாக ரூ.2 ஆயிரம் வழங்குவதுடன், அவர்கள் 10 நாட்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்து தேர்வில் கலந்துகொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளைம் தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் செய்கிறது.
மாதிரி ஆளுமைத்தேர்வு பற்றிய கூடுதல் விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும், விவரங்கள் தேவைப்பட்டால் 044-24621475 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.