

சென்னை சென்ட்ரல்- திருப்பதி இடையே கடந்த சனிக்கிழமை (மார்ச் 22) தொடங்கப்பட்ட புதிய மெயின்லைன் புறநகர் மின்சார ரயில் திடீரென்று காலவரையறை இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே திங்கட்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை சென்ட்ரல்-திருப்பதி-சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில் ரயில் எண் 66047 மற்றும் ரயில் எண் 66048 ஆகிய மெயின்லைன் புறநகர் மின்சார ரயில் சேவைகள் புதிதாக தொடங்கப்பட்டன. அந்த ரயில் சேவை பல்வேறு பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) முதல் மறு தேதி அறிவிக்கப்படும் வரை ரத்து செய்யப்படுகிறது.
ரயில் பாதுகாப்பு
மேலும் ரயில் பயணங்களின்போது ஏற்படுகிற அசம்பாவிதங்களில் இருந்து தப்பிப்பது குறித்த சிறப்பு பாதுகாப்பு பயிற்சிகள் சென்னை சென்ட்ரலிலுள்ள 6-வது நடை மேடையில் திங்கள்கிழமை நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆபத்து காலத்தில் எப்படி தப்பிப்பது, தீயணைப்பு இயந்திரத்தை எப்படி இயக்குவது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த பாதுகாப்பு பயிற்சியின் போது தெற்கு ரயில்வே கூடுதல் மேலாளர் விஜயகுமாரன், முதன்மை பாதுகாப்பு மேலாளர் அனந்தராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.