

சென்னை கடற்கரை – வேளச் சேரி இடையே பறக்கும் ரயில்கள் (எம்.ஆர்.டி.எஸ்.) இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாதையில் கோட்டை, பூங்காநகர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபாய் நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன.
அடிப்படை வசதிகள் இல்லை
இவற்றில் பெரும்பாலான ரயில் நிலையங்களில் குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. பல நேரங்களில் லிப்ட், எஸ்கலேட்டர்கள் வேலை செய்வதில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிக்கிறது என்று பயணிகள் நீண்டகாலமாக புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில், எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையங்களில் தரமான ஓட்டல்கள் இல்லை என்ற குறையைப் போக்க இந்தியன் ரயில்வே உணவகம் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) முன்வந்தது.
‘புட் பிளாசா’ திட்டம்
அதன்படி, பயணிகள் போக்கு வரத்து அதிகமாக உள்ள மயிலாப்பூர், திருவான்மியூர், வேளச்சேரி ஆகிய 3 ரயில் நிலையங்களில் ‘புட் பிளாசா’ தொடங்க ஐ.ஆர்.சி.டி.சி. திட்டமிட்டது. புட் பிளாசாவில், சைவ, அசைவ ஓட்டல்கள், பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், ஜூஸ் விற்பனையகம் ஆகியவை இடம்பெறும்.
கடும் நிபந்தனைகள்
புட் பிளாசாவில் ஓட்டல் மற்றும் ஸ்டால்கள் அமைப்பதற்கு ஐ.ஆர்.சி.டி.சி. ஏராளமான நிபந்தனைகளை விதித்துள்ளது. ஓட்டல் நடத்த முன்வரும் நிறுவனத்தின் ஆண்டு வரவு, செலவு ரூ.25 லட்சமாக இருக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் இதே அளவுக்கு வர்த்தகம் நடந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி.யின் ஆண்டு உரிமக் கட்டணம் ரயில் நிலையத்துக்கு ஏற்ப மாறுபடு கிறது. அதன்படி, வேளச்சேரி ரயில் நிலையத்தில் புட் பிளாசா நடத்துவதற்கான ஆண்டு உரிமக் கட்டணம் ரூ.24.75 லட்சம். மயிலாப்பூருக்கு ரூ.41.31 லட்சமும், திருவான்மியூருக்கு ரூ.32.52 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 12.36 சதவீதம் சேவை வரி சேர்த்துக் கட்ட வேண்டும்.
தினமும் ரூ.8 ஆயிரம்
இந்த அடிப்படையில் கணக்கிட்டால், வேளச்சேரி ரயில் நிலையத்தில் ஓட்டல் நடத்த முன்வரும் நிறுவனம், தினமும் சுமார் ரூ.8 ஆயிரம் வரை ஐ.ஆர்.சி.டி.சி.க்கு செலுத்த வேண்டும். இதுபோக உணவு தயாரிப்பு செலவு, ஊழியர்கள் சம்பளம், பராமரிப்புச் செலவு எல்லாம் இருக்கிறது. பறக்கும் ரயில் நிலையங்களில் அந்த அளவுக்கு பயணிகள் போக்குவரத்து இல்லை என்று ஓட்டல் நிறுவனங்கள் கருதுகின்றன. அதனால் யாரும் டெண்டரில் கலந்து கொள்ளவில்லை.
நிபந்தனை தளர்த்த பரிசீலனை
சென்னையைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் ஐ.ஆர்.சி.டி.சி. தென்மண்டல நிர்வாகம், டெல்லியில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. தலைமையிடத்துக்கு ஆண்டு உரிமக் கட்டணத்தைக் குறைக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
‘‘கட்டணத்தைக் குறைப்பது குறித்து ரயில்வே நிர்வாகம்தான் முடிவெடுக்க வேண்டும். இதற்கு நீண்டகாலம் ஆகும் என்பதால், பறக்கும் ரயில் நிலையங்களில் இப்போதைக்கு ஓட்டல் தொடங்குவது சாத்தியம் இல்லை. எனினும் எங்களது கோரிக்கையை ஏற்று, நிபந்தனைகளை தளர்த்துவது பற்றி ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருகிறது’’ என்று அவர் மேலும் கூறினார்.