Published : 14 Mar 2017 07:09 PM
Last Updated : 14 Mar 2017 07:09 PM

முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் நடவடிக்கை கோரி மோடியிடம் முதல்வர் அழுத்தம் தர வேண்டும்: ஸ்டாலின்

மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் உரிய நடவடிக்கை எடுக்க மோடியிடம் முதல்வர் பழனிசாமி அழுத்தம் தர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக (பி.எச்.டி) படித்து வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

அந்த இளம் மாணவரின் மரணத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலக் கனவுகளை சுமந்து உயர்கல்விக்குச் சென்ற அந்த மாணவனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும் எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

நண்பர் ஒருவர் வீட்டிற்கு மதிய உணவு சாப்பிடச் சென்ற போது அந்த நண்பரின் வீட்டில் உள்ள அறையிலேயே முத்துக்கிருஷ்ணன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவலை கேள்விப்பட்ட அவரது தந்தை ஜீவானந்தம், 'என் பிள்ளை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை அல்ல' என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் வழக்கம் போல் விசாரணைக்குப் போன உடனேயே 'சில நாட்களாக சொந்தப் பிரச்சினைகளால் அவர் மனதளவில் சோர்வடைந்து இருந்ததாக கூறப்படுகிறது' என்று டெல்லி போலீஸ் கமிஷனர் சின்மய் பிஸ்வாஸ் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத கருத்தாக இருக்கிறது.

மாணவர் முத்துக்கிருஷ்ணன் முன்பு ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் என்பதும், அங்கு தற்கொலை செய்து கொண்ட மாணவர் ரோஹித் வெமுலாவிற்காக நீதி கேட்டுப் போராடியவர்களில் மாணவர் முத்துக்கிருஷ்ணனும் ஒருவர் என்பதையும் டெல்லி போலீஸார் புறந்தள்ளி விட முடியாது.

அதிலும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தினத்திற்கு முதல் நாள் –அதாவது 10.3.2017 அன்று அவருடைய முகநூல் பக்கத்தில் 'தனது ஆய்வு, அந்த ஆய்வில் நடத்தப்படும் நேர்காணல் உள்ளிட்ட அனைத்திலும் சமத்துவம் இல்லை' என்று பதிவிட்டிருப்பது தலித் மாணவர் முத்துக்கிருஷ்ணன் டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் சந்தித்த ஏற்றத்தாழ்வுப் பிரச்சினைகளை அடையாளம் காட்டுவதாக அமைந்திருக்கிறது. அந்த முகநூல் பதிவுகளையும் உதாசீனப்படுத்தக்கூடிய விவகாரமாக டெல்லி போலீஸார் நிச்சயம் பார்க்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஏற்கெனவே திருப்பூரை சேர்ந்த எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சரவணன் 10.7.2016 அன்று மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். அப்போது நான் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள கட்சி தலைவர்கள் எல்லாம் 'அந்த தற்கொலையில் மர்மம் இருக்கிறது. சிபிஐ விசாரணை தேவை' என்று கோரிக்கை வைத்தோம்.

ஆனால் டெல்லி போலீஸார் அதை தற்கொலை என்றே திரும்பத் திரும்ப கூறிவந்தனர். பிறகு பிரேத பரிசோதனை அறிக்கையில் தற்கொலைக்கான தடயங்கள் ஏதுமில்லை என்று கூறிய பிறகுதான் கடந்த டிசம்பர் 25-ம் தேதி அன்று எய்ம்ஸ் மருத்துவ மாணவன் சரவணன் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி ஐந்து மாதங்களுக்குப் பிறகு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தார்கள்.

அந்த கொலை வழக்கின் அடுத்த கட்ட விசாரணை என்னவென்றே இதுவரை வெளியுலகத்திற்கு தெரியவில்லை. மருத்துவ மாணவர் சரவணன் கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பதும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த கொலையின் சுவடுகள் மறைவதற்கு முன்பு அடுத்த கட்டமாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார் என்று மீண்டும் டெல்லி போலீஸார் கூறுகிறார்கள்.

இந்த தற்கொலையில் மர்மம் இருப்பதாக மாணவனின் தந்தையே வெளிப்படையாக பேட்டியளித்திருக்கிறார். ஆகவே ஆய்வு மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் குறித்து உடனடியாக நியாயமான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

திருப்பூர் மருத்துவ மாணவர் சரவணன், சேலம் மாணவர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோரின் மரணங்கள் தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களில் படிக்கச் செல்ல விரும்பும் மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது தமிழக மாணவர் டெல்லியில் மரணம் அடைவது தமிழக மாணவர்களுக்கு தலைநகர் டெல்லியிலேயே பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஆகவே மாணவர் சரவணன் கொலை வழக்கு, மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் ஆகிய இரண்டையும் உடனடியாக மத்திய அரசு சிபிஐயிடம் ஒப்படைத்து உண்மைக் குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய வேண்டும்.

உயர்கல்விக்காகவும், மருத்துவக் கல்விக்காகவும் டெல்லி செல்லும் தமிழக மாணவர்கள் தொடர்ந்து மரணம் அடைவதை தடுக்க மத்திய அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியை உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் உரிய நடவடிக்கை எடுக்க அழுத்தம் தர வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x