வண்டல் மண் எடுக்கும் பணியால் பவானி அணை நீர்பிடிப்புப் பகுதியில் பாதிக்கப்படும் உயிர்ச்சூழல்: யானைகள் ஊடுருவலால் அச்சத்தில் சிறுமுகை வனத்துறை

வண்டல் மண் எடுக்கும் பணியால் பவானி அணை நீர்பிடிப்புப் பகுதியில் பாதிக்கப்படும் உயிர்ச்சூழல்: யானைகள் ஊடுருவலால் அச்சத்தில் சிறுமுகை வனத்துறை
Updated on
2 min read

தமிழகத்தில் அணைகளைத் தூர்வாரவும், வண்டல் மண் எடுக்கவும் பல வருடங்களுக்குப் பிறகு அரசு அனுமதித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், பவானிசாகர் அணையைச் சார்ந்துள்ள சிறுமுகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலைமை வேறாக உள்ளது. அதிகளவில் யானைகள் வாழும் பகுதி என்பதால், அணை தூர்வாரும் பணிகளால் இங்குள்ள உயிர்ச்சூழல் பாதிக்கப்படும் என்ற அச்சுறுத்தல் எழுந்துள்ளது.

கோவை வனக் கோட்டத்துக்கு உட்பட்ட 7 வனச்சரகங்களில், யானைகள் பெருக்கம் அதிகமாக இருப்பது சிறுமுகை வனச்சரகம். நீலகிரி மலைத் தொடர் கிழக்குச் சரிவுப் பகுதியாகவும், பவானிசாகர் அணை நீர்பிடிப்புப் பகுதியாகவும் இருப்பதால் ஏராளமான யானைகள் இங்கு வாழ்கின்றன. வறட்சி, வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள விவசாய ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் சமீபகாலமாக அருகாமை கிராமங்களில் யானைகள் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் இக்கட்டான வனச்சூழல் இங்கு நிலவுகிறது.

இந்நிலையில், பவானிசாகர் அணையைத் தூர்வாரி வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு கொடுக்க ஈரோடு மாவட்ட பொதுப்பணித் துறை முடிவு செய்து அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது. சிறுமுகை அருகே உள்ள பெத்திக்குட்டை பகுதியில் கனரக வாகனங்கள் மூலம் அணையின் வண்டல் மண்ணைத் தோண்டி எடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே யானைகள் ஊடுருவல் பிரச்சினை அதிகரித்துள்ள நிலையில், தூர்வாரும் பணியால், இப்பிரச்சினை மேலும் அதிகரிக்கும் என வனத்துறையினர் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே காப்புக்காட்டை ஒட்டியுள்ள அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தூர்வரும், மண் எடுக்கும் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்துகின்றனர்.

வனச்சூழல் பாதிப்பு

வனத்துறையினர் கூறும்போது, ‘பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியை ஒட்டியுள்ள பெத்திக்குட்டை, கூத்தாமண்டி பிரிவுகளில் வழக்கமாகவே யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் அதிகளவில் உள்ளன. ஓரளவுக்கு நீர் ஆதாரமும், வலசைப்பாதையும் இருப்பதால் கூட்டம் கூட்டமாக யானைகள் உலவும் உயிர்ச்சூழலும் உள்ளது. வறட்சியால் நீர் ஆதாரம் குறைந்து வனவிலங்குகள் கிராமங்களுக்குள் வரும் சூழல் நிலவுகிறது. மாலை 4 மணிக்கு மேல் மண் எடுக்க மாட்டோம் என்றனர். ஆனால் நாள் முழுக்க பணி நடக்கிறது.

இதில் கனரக இயந்திரங்கள், வாகனங்கள் மூலம் வண்டல் மண் எடுக்கும் பணியும் தொடங்கியுள்ளதால் சூழல் மேலும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வனத்துறை, சூழலியல் ஆர்வலர்கள் என பல தரப்பிலிருந்தும் தற்போது, மண் எடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டாம் என அணை நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளோம்’ என்றனர்.

நேரில் ஆய்வு

வனப்பகுதி கோவை மாவட்டத்திலும், அதை ஒட்டியுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதி அணை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலும் (ஈரோடு மாவட்டம்) இருப்பதால் உடனடியாகத் தீர்வு காண முடியாத சூழல் நிலவுகிறது. இதனிடையே, இக்கோரிக்கை ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, சத்தியமங்கலம் வட்டாட்சியர் புகழேந்தி தலைமையிலான அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். அவர்கள் கூறும்போது, ‘வண்டல் மண் எடுப்புப் பணிகளால் வனச்சூழல் பாதிப்பதாக வந்த புகாரை அடுத்து ஆய்வு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு இங்குள்ள நிலைமை குறித்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது’ என்றனர்.

இப்பிரச்சினை குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் கூறும்போது, ‘பவானிசாகர் அணைப்பகுதியில் வண்டல் மண் எடுப்பதால் கோவை மாவட்டத்தின் சிறுமுகை பகுதியில் வனச்சூழல் பாதிக்கும் என தகவல் வந்தது. பிரச்சினை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பணியை நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

‘வனத்துறை இடமல்ல’

பவானி சாகர் அணையின் பொதுப்பணித் துறை உட்கோட்ட அலுவலர் திருமூர்த்தியிடம் கேட்டபோது, ‘பல வருடங்களாக தூர்வாரப் படாமல் உள்ள அணையை தூர்வாருவது என்பது விவசாயிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பு. இதனால் கோவை மாவட்ட விவசாயிகளும் பயனடைவார்கள். அதற்காகவே ஒரு லோடு வண்டல் மண் ரூ.100 என கொடுக்கிறோம். இப்பணிகள் நடப்பதால், வனச்சூழல் பாதிக்கப்படும் என புகார் எழுந்ததால், சம்பந்தப்பட்ட பகுதி வன அலுவலர் உடனான கூட்டம் நடத்தினோம்.

அதில் மாலை 4 மணி வரை மட்டுமே மண் எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வலியுறுத்தல்களை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப மண் எடுக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதையும் மீறி, இப்பணியானது அணை, அணைக்கு உட்பட்ட நீர்ப்பிடிப்புப் பகுதியிலேயே மேற்கொள்ளப்படுகிறது. வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in