

திருச்செந்தூர் அருகே நூதன முறையில், பனைத் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.28 லட்சத்தை மோசடி செய்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் அருகே அடைக் கலாபுரம் ஜெபஸ்தியார் தெருவைச் சேர்ந்தவர் பே.பால்ராஜ்(54), பனைத் தொழிலாளி. இவர், ஆறுமுகநேரியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப் புக் கணக்கு வைத்துள்ளார்.
கடந்த ஜன.31-ம் தேதி இவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர், வங்கி மேலாளர் பேசுவதாகக் கூறி, ‘உங்களது ஏடிஎம் கார்டு முடங்கி விட்டது. இதை சரி செய்ய ஏடிஎம் கார்டின் 16 இலக்க எண்ணை தெரிவியுங்கள்’ எனக் கேட்டுள்ளார். இதை நம்பிய பால்ராஜ், அந்த எண்ணை தெரிவித்துள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த நபர் மீண்டும் தொடர்பு கொண்டு, ‘உங்கள் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில் இருக்கும் கடவுச் சொல்லை தெரிவிக்குமாறு’ கேட்டதையடுத்து, அவரும் தெரிவித்துள்ளார்.
மறுநாள் பால்ராஜின் செல் போனுக்கு வந்த குறுந்தகவலில், அவரது வங்கிக் கணக்கில் இருந்து 1 லட்சத்து 27 ஆயிரத்து 919 ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந் தது. அதிர்ச்சியடைந்த அவர் வங்கி மேலாளரிடம் புகார் தெரிவித்துள் ளார். பால் ராஜின் கணக்கை அவர் சரி பார்த்த போது, ரூ.1,27,919 ஆன் லைன் மூலம் பேடிஎம்-க்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மாவட்ட எஸ்பி அஸ்வின் எம். கோட்னீஸிடம், பால்ராஜ் அளித்த புகாரின்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்தனர். அதில், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ஆன்லைன் மூலம் பண மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. ஆய்வாளர் சாகுல் ஹமீது, உதவி ஆய்வாளர் சாம் சுந்தர் ஆகியோரது தலைமையில் தனிப்படை போலீஸார், மேற்கு வங்க மாநிலத்துக்கு சென்றனர்.
கூக்ளி மாவட்டம், ஷிப்ரா பகுதியைச் சேர்ந்த கமாலுதீன் மகன் ஜாவீத் அக்தர்(19), மொஸானபாத் கிராமத்தைச் சேர்ந்த லா.காதீர் உசைன்(37) ஆகிய 2 பேரை கைது செய்தனர். உடந்தையாக இருந்த மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.
மோசடி செய்த பணம் ஆன்லைன் மூலம் பேடிஎம்-க்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.