

திருமூர்த்தி அணை வரலாறு காணாத வறட்சியை சந்தித்துள்ள நிலையிலும் அடுத்த 6 மாதங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 1.9 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டது. பிஏபி திட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.
கடந்த ஆண்டு பருவமழைகள் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. அதனால் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. அதன் எதிரொலியாக கடந்த ஜனவரி மாதத்தில் 3-ம் மண்டல பாசனத்தில் உள்ள நிலங்களுக்கு ஒரே ஒரு சுற்றுக்கு மட்டுமே தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக அணைக்கு நீர் வரத்து இல்லாததால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து 22 அடியை எட்டியுள்ளது. அடுத்ததாக 4-ம் மண்டல பாசனப் பரப்பில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
உடுமலை நகராட்சி, பூலாங்கிணர் கூட்டுக் குடிநீர் திட்டம், கணக்கம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டம், 3-வது குடிநீர் திட்டம், புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள குடிமங்கலம் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவற்றுக்கு அணையில் இருந்து நாள்தோறும் குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. அணையில் உள்ள குறைவான நீர் இருப்பின் மூலம் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2015-ம் ஆண்டு இறுதியில் வடகிழக்கு பருவமழையால் அணையின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவை எட்டியது. அதனால் 2016 ஜனவரியில் 2 ம் மண்டலத்துக்கு 2 சுற்றுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு பருவமழை ஏமாற் றியதால் அணைக்கு நீர்வரத்து கிடைக்கவில்லை. அணையில் இருந்த நீரின் அளவைக் கொண்டு 3-வது மண்டலத்துக்கு குறைவான நீர் விநியோகிக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 22 அடியாக உள்ளது. குடிநீருக்காக தினமும் 21 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கோடை மழையோ அல்லது வரும் ஜூன், ஜூலை மாதங்களில் எதிர்பார்க்கப்படும் தென்மேற்கு பருவமழையோ கைகொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போதுள்ள நீர் இருப்பைக் கொண்டு அடுத்து வரும் 6 மாதங்களுக்கு குடிநீர் விநியோகிக்கலாம். தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. 4-வது மண்டல பாசனத்துக்கு வரும் ஆகஸ்ட் மாதத்தில் தண்ணீர் திறக்க வேண்டும். அதற்குள்ளாக பருவமழை கைகொடுக்கும் என்று நம்புகிறோம் என்றனர்.