

தேனி மாவட்டம், சின்னமனூரில் உள்ள பழமையான கோயில் தெப்பத்தை தனிப்பட்ட முறையில் பணம் செலவழித்து மென்பொறியாளர் ஒருவர் சீரமைத்துள்ளார்.
சின்னமனூரில் சுமார் 1300 ஆண்டு பழமையான சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலுக்கு அருகேயுள்ள தெப்பம், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் பாழடைந்து கிடந்ததால், குப்பைகள் அதிகளவில் சேர்ந்திருந்தன. தற்போது மழையின்றி தெப்பம் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில், சின்னமனூரைச் சேர்ந்த ஆர்.மது என்ற மென்பொறியாளர் தனது ஊர் பகுதியில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி, மழை நீரைச் சேகரிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டார். இவர் கோயம்புத்தூரில் சொந்தமாக மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே சின்னமனூ ருக்கு வந்த ஆர். மது, தனது திட்டத்தைச் செயல்படுத்த களம் இறங்கினார். தமிழ் புத்தாண்டு அன்று பணியைத் தொடங்கி மூன்றே நாட்களில் முடித்துள்ளார். முதல்நாளில் தெப்பத்துக்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால் சீரமைக்கும் பணி நடைபெற்றது. அடுத்தடுத்த நாட்களில் தெப்பத்தில் உள்ள குப்பைகள், சகதிகள் உள்ளிட்டவை முழுவதுமாக அகற்றப்பட்டன. இந்தப் பணியில் 25 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொழிலாளர்களுக்கான 3 நாள் ஊதியம், அவர்களுக்கான உணவு ஆகியவற்றை முழுமையாக மது ஒருவரே கொடுத்துள்ளார். தற்போது கோயில் தெப்பம் குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மை யாக காட்சி அளிக்கிறது. வரத்து வாய்க்கால் சீரமைக்கப்பட்டதால் மழைக் காலம் தொடங்கினால், இந்த தெப்பத்துக்கு நீர்வரத்து ஏற்படும். தெப்பத்தில் நீர் தேங்கும் நிலையில் சின்னமனூரில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்படும்.
இதுகுறித்து ஆர். மது கூறியதாவது: இன்றைய சூழ்நிலையில் மழைநீர் சேகரிப்பு அவசியமானதுதான். இதனால் சின்னமனூரில் உள்ள சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயிலில் உள்ள பழமை வாய்ந்த தெப்பத்தை சீரமைக்க முடிவு செய்தேன். நம் முன்னோர்களின் நீர் மேலாண்மைக்கு உதாரணமாக இந்த தெப்பம் உள்ளது. இதற்கு அனுமதி பெற்று தெப்பத்தைச் சீரமைக்கும் பணியில் 25 தொழிலாளர்களை ஈடுபடுத்தினேன். தொழிலாளர்களுக்கு உணவு, சம்பளம் வழங்கினேன். இதற்கான செலவுத் தொகையை தெரிவிக்க விரும்பவில்லை.
3 நாட்கள் பணிகள் நடந்த போது, கோயிலுக்கு வந்து சென்றவர்கள் எனது முயற்சியை பாராட்டினர். அடுத்தமுறை, நீங்கள் எடுக்கும் முயற்சியில் தங்களின் பங்களிப்பையும் தருவதாகக் கூறிச்சென்றனர். தெப்பத்தை சீரமைத்தது ஆன்மிக சேவையாகவும், மழை நீரை சேகரிக்கும் பணியாகவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது என பலவிதங்களில் எனக்கு மனதிருப்தியை அளித்தது. அடுத்தபடியாக சின்னமனூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள குளங் களை சீரமைக்கும் பணியில் ஈடு படத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.