

திருப்பத்தூர் பெரிய கண்மாய் கலுங்கில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மேலும் 12 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் வட்டம் பூலாங்குறிச்சி அரசு கல்லூரி வர லாற்றுத்துறை பேராசிரியர் வேலாயுதராஜா, கல்வெட்டு ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் திருப்பத்தூர் பெரிய கண்மாய் பகுதியில் நேற்று முன்தினம் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மேலும் 12 கல்வெட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:
கண்மாய் தரைத் தளத்தில் ஏற்கெனவே இரு கல்வெட்டுகள் இருந்தன. தற்போது கண்மாய் கலுங்கின் கிழக்கு சுவரில் இரு கல்வெட்டுகள், தெற்கு சுவரில் மூன்று கல்வெட்டுகள், வடக்கு சுவரில் இரண்டு கல்வெட்டுகள், தண்ணீர் வழிந்தோடும் படிக்கட்டுகளில் ஐந்து கல்வெட்டுகள் என மொத்தம் 12 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவை 13-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த குலசேகர பாண்டியனின் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள். இதில், கேரள சிங்க வளநாடு எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. நாராயணன், விண்ணகராழ்வார் என்ற பெயர்கள் வருகின்றன.
திருப்பத்தூரில் உள்ள நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் இந்திய தொல்லியல் துறையால் 1906, 1935-களில் கண்டெடுக்கப்பட்ட 13-ம் நூற் றாண்டு கல்வெட்டுகளில் திருப் பத்தூரில் உள்ள விண்ணகர் ஆழ்வார் கோயில், கோலவராக விண்ணகர் எம்பெருமான் என்ற குறிப்புகள் உள்ளன. எனவே இக்கல்வெட்டுகள் திருப்பத்தூரில் உள்ள பெருமாள் கோயில் கல்வெட்டுகளாக இருக்கலாம்.
18-ம் நூற்றாண்டில் சிவகங்கை சமஸ்தானத்தை ஆட்சி செய்த முத்துவடுகநாததேவரால் இக்கலுங்கு கட்டப்பட்டதாக இங்குள்ள தூண் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இப்பகுதியில் உள்ள கோயிலில் இருந்து கற்களை எடுத்து வந்து இக்கலுங்கு கட்டப்பட்டிருக்கலாம். கோயிலில் உள்ள அரைத்தூண்கள், யாளி வரிகளும் காணப்படுகின்றன எனத் தெரிவித்தனர்.