Published : 31 Jul 2016 09:57 AM
Last Updated : 31 Jul 2016 09:57 AM

வாய் புற்றுநோயால் நீக்கப்பட்ட தாடை சீரமைப்பு: சென்னை பாலாஜி பல் மருத்துவமனை சாதனை

வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு நீக்கப்பட்ட தாடையை அறுவை சிகிச்சை மூலம் சீரமைத்து சென்னை பாலாஜி பல் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

இது தொடர்பாக பாலாஜி பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத் துவமனை இயக்குநர் எஸ்.எம்.பாலாஜி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தைச் சேர்ந்தவர் முகமது ஷகீல் கான். புகையிலை பழக்கத்தால் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது இடதுபுற கீழ் தாடை அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதி காலியாக, முகத்தோல் உள்வாங்கிய நிலையில் இருந்தது.

புற்றுநோய் குணமடைந்த நிலையில், அவர் கடந்த 11-ம் தேதி மீண்டும் எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். இந்த முறை அவருடைய விலா எலும்பிலிருந்து ஒரு பகுதியை எடுத்து, அவரது இடது தாடை பகுதியில் பொருத்தப்பட்டது. அதனால் அவரது முகம் தற்போது அழகாகியுள்ளது.

அகற்றப்பட்ட தாடையை சீரமைக் கும் சிகிச்சை பாகிஸ்தானில் இல்லாததால் அவர் இங்கு சிகிச்சைக்கு வந்துள்ளார்.

இந்தியாவில், விபத்தில் காயமடைந்தோருக்கு தாடை உடைந்திருந்தால், அவர்களுக்கு தாடை பொருத்தப்பட்டு வருகிறது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு தாடையை பொருத்துவது மிகவும் சிக்கலான ஒன்று. அத்தகைய அறுவை சிகிச்சையை நாங்கள் செய்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷகீல் கான் கூறும்போது, “இவ்வளவு சிறப்பாக, முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

முகமது ஷகீல் கானின் மனைவி சதியா கூறும்போது, “சிகிச்சைக்கு இந்தியா செல்ல வேண்டும் என்றபோது தயக்கமாக இருந்தது. சென்னை வந்த பிறகு, நாங்கள் மிகவும் பாதுகாப்பாகவும், அனைத்து வசதிகளுடன் இருப் பதை உணர்கிறோம். எனது மகன் முகமது பசாமுக்கு இந்த ஊர் மிகவும் பிடித்திருக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x