

பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்வதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்து ஆன்மிக சேவை மையம் சார்பில் சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரை இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடக்க உள்ளது.
இதற்கு முன்னோட்டமாக சுவாமி விவேகானந்தர் சிலைகளுடன் 25 ரதங்கள் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள 1,000-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு செல்ல இருக்கிறது. இந்த ரத யாத்திரை மயிலாப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்நிலையில், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ர த யாத்திரை செல்வதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு விவேகானந்தர் ரத யாத்திரை மயிலாப்பூரில் தொடங்கியுள்ளது. இதற்காக 25 ரதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விவேகானந்தர் ரதங்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளுக்கு செல்ல இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தைப் பரப்பியவர் என புகழப்படுபவர் விவேகானந்தர். இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியோடு தொடர்புபடுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்கு செல்வது ஏற்கக் கூடியதல்ல. மாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனைகளை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா?
மதச்சார்பின்மை
இந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்கள் தூண்டப்படும் இந்தக் காலகட்டத்தில் மத்தியில் உள்ள இந்துத்துவ ஆட்சியோடு தமிழக அரசும் கைகோர்த்து விட்டதா? இது மதச்சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானது. தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி மதச்சார்பின்மையை பாதுகாப்பாரா? விவேகானந்தர் ரத ஊர்வலம் பள்ளிகளுக்கு செல்வதை தடுப்பாரா என்பதை பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எஸ்.குருமூர்த்தி கருத்து
கி.வீரமணியின் இந்த எதிர்ப்பு குறித்து இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கருப்புச் சட்டை அணிந்துள்ள வீரமணி, இந்து கடவுள்களை எதிர்ப்பவர். ஆனால், இன்று பல லட்சக்கணக்கான தமிழர்கள் அதே கருப்புச் சட்டை அணிந்து சபரிமலை செல்கின்றனர்.
காடுகள், விலங்குகளை பாதுகாக்க வேண்டும், சுற்றுச்சூழலை பேண வேண்டும், குடும்பம் மற்றும் மனித மதிப்பீடுகளை பின்பற்ற வேண்டும், பெண்களை மதிக்க வேண்டும், தேச பக்தியை கடைபிடிக்க வேண்டும் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடத்தப்படுகிறது. எனவே, இந்தக் கண்காட்சியை எதிர்ப்பது ஏன் என கி.வீரமணியிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.
இவ்வாறு குருமூர்த்தி கூறியுள்ளார்.