

சென்னை போக்குவரத்து நெருக்கடியை குறைக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று காவல் ஆணையாளர் எஸ்.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளராக எஸ்.ஜார்ஜ் நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை பெரு நகர மக்களுக்கு சேவை செய்வதற்கு தனக்கு வாய்ப்பளித்ததற்காக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு, குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். பார்வையில் புலப்படும்படியான காவல் பணி அதிகரிக்கப்படும். ரோந்துப் பணி பலப்படுத்தப்படும். பொது மக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வருகிற 10, 11-ம் தேதிகளில் நடைபெறவுள்ள விநாயகர் சிலை ஊர்வலங்கள் மற்றும் 13-ம் தேதி பக்ரித் பண்டிகை கொண்டாட்டத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.