Published : 23 Mar 2014 01:26 PM
Last Updated : 23 Mar 2014 01:26 PM

பாஜக அணியை ஜெயலலிதா விமர்சிக்காதது ஏன்?- மார்க்சிஸ்ட்

'மதவெறி பாஜக தமிழகத்தில் சாதிவெறி மற்றும் சந்தர்ப்பவாத கட்சிகளை அணிதிரட்டி அமைத்துள்ள கூட்டணியை அதிமுக விமர்சிக்காதது ஏன்?' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.



இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தமிழகத்தில் மார்ச் 3ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி 11 நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

வெள்ளியன்று காரைக்குடியில் உரையாற்றிய அவர், அதிமுகதான் முதன்மையான டீம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அகில இந்திய அளவில் எந்த டீமில் அதிமுக அங்கம் வகிக்கிறது என்று அவர் குறிப்பிடவில்லை.

தனது தேர்தல் பிரச்சார உரைகளில் காங்கிரசையும், திமுகவையும் அவர் கடுமையாக சாடுகிறார். சரியாகவே விமர்சித்திருக்கிறார். அதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் தப்பித்தவறி ஒரு கூட்டத்தில்கூட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியையோ, நான் தான் பிரதமர் என்று கூறிக்கொண்டு திரியும் நரேந்திர மோடியையோ அவர் விமர்சிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

மத்தியில் காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத, மதச்சார்பற்ற மாற்று அரசு ஒன்று அமைய வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் விரும்புகின்றன. அதற்கான வகையில் அகில இந்திய அளவில் தேர்தல் கள வியூகம் அமைத்து பாடுபடுகின்றன. 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி புது டெல்லியில் மதவெறி அரசியலை முறியடிப்போம். மதச்சார்பின்மையை, மக்கள் ஒற்றுமையை பாதுகாப்போம் என்ற அறைகூவலுடன் இடதுசாரி கட்சிகள் மாநாடு ஒன்றை நடத்தின. இதில் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட 14 கட்சிகள் பங்கேற்றன. இந்த மாநாட்டில் அதிமுக சார்பில் மு.தம்பிதுரை பங்கேற்றார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உரையை மாநாட்டில் அவர் வாசித்தார்.

ஜெயலலிதா தனது உரையில் 'மதச்சார்பின்மை என்ற கருத்தோட்டம் அண்மைக் காலத்தில் ஏற்பட்டதல்ல. நம்முடைய பண்பாட்டிலும், பாரம்பரியத்திலும் நீண்ட நெடுங்காலமாக பேணப்பட்டு வந்துள்ள ஒரு தத்துவமாகும்' என்று குறிப்பிட்டதோடு 'இந்திய அரசியல் சாசனத்தின் மாண்புகளை உயர்த்திப்பிடித்து, பிளவுவாத சக்திகளை முறியடித்து, இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாப்பது நம்முன் உள்ள முக்கியக் கடமையாகும்' என்றும் மிகச்சரியாக குறிப்பிட்டார்.

பாரதிய ஜனதாவை பொறுத்த வரை இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்தும் மதச்சார்பின்மையை அவர்கள் ஏற்பவர்கள் அல்ல. இதை அவர்கள் போலி மதச்சார்பின்மை என்றே கூறுகின்றனர். இந்துத்துவா அடிப்படையில் மட்டுமே இந்த நாடு இருக்க வேண்டும், சிறுபான்மை கிறிஸ்தவ, முஸ்லிம் மக்கள் இரண்டாம்தர குடிமக்களாகவே இருக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தத்தையே பாஜகவும் முன்வைக்கிறது. அத்தகைய பிளவுவாத சக்தியை முறியடித்து இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாப்பது முக்கியக் கடமை என்று ஜெயலலிதா தமிழக மக்களிடம் எடுத்துரைக்காதது ஏன்? என்ற கேள்வி எழுவது இயல்பானதே.

மேலும் 2014ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி டெல்லியில் 11 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தலைவர்கள் கூட்டாக பிரகடனம் ஒன்றை விடுத்தனர். "ஊழல் காங்கிரசை தூக்கி எறிவோம். மதவெறி பாஜகவை தடுப்போம், மக்கள்நல மாற்று அரசை அமைப்போம்" என்று அந்த கூட்டத்தில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் கூறப்பட்டிருந்தது.

"காங்கிரசுக்கு தானே மாற்று என்று கூறிக் கொண்டிருக்கும் பாஜகவும் காங்கிரசின் கொள்கைகளிலிருந்து எந்த விதத்திலும் மாற்றுக் கொள்கைகளை கொண்டிருக்கவில்லை. பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் புரிந்துள்ள ஊழல்களும், பின்பற்றுகிற பொருளாதாரக் கொள்கைகளும் அக்கட்சி காங்கிரசுக்கு எந்தவிதத்திலும் மாற்றுக் கட்சி என்று கூற முடியாத வகையில் தான் இருக்கிறது. இரு கட்சிகளுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவைதான். மேலும், பாஜக பின்பற்றும் தத்துவம் நாட்டைப் பிளவுபடுத்தக் கூடியதும், மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தக்கூடியதும், மத நல்லிணக்கத்திற்கு விரோதமானதும் ஒட்டுமொத்தத்தில் நம் மதச்சார்பற்ற ஜனநாயக வலைப்பின்னலையே ஆபத்திற்குள்ளாக்கக் கூடியதுமாகும். பாஜகவும் மதவெறி சக்திகளும் தோற்கடிக்கப்பட வேண்டும். ஆட்சிக்கு வரமுடியாத விதத்தில் தடுக்கப்பட்டாக வேண்டும். காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் மாற்றாக ஓர் அணி சேர்க்கையை உருவாக்கிட வேண்டும்."

முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார உரைகளில் இந்த பிரகடனத்தின் சாயல்கூட தென்படவில்லையே? குஜராத்தில் 2002ம் ஆண்டு சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும், அதில் நரேந்திர மோடியின் பங்கும் அதிமுக அறியாத ஒன்றல்லவே.

மதவெறி பாஜக தமிழகத்தில் சாதிவெறி மற்றும் சந்தர்ப்பவாத கட்சிகளை அணிதிரட்டி கூட்டணி ஒன்றை அமைத்துள்ளதே? இந்த கூட்டணியை அதிமுக விமர்சிக்காதது ஏன்? என்ற கேள்விகளெல்லாம் தமிழக தேர்தல் களத்தில் எழுகின்றன.

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அதிமுகவுக்கும் அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கும் உண்டு. அதிமுக பங்கேற்கும் மத்திய அரசு அமைய வேண்டுமென்று முதல்வர் கூறுகிறார். காங்கிரஸ் பின்பற்றும் அதே பொருளாதாரக் கொள்கையைத்தான் பாஜகவும் முன்வைக்கிறது. அந்த கொள்கைதான் பெட்ரோல், டீசல் துவங்கி அனைத்துப் பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும் கொள்கையாகும். அந்நிய முதலீட்டை அரவணைக்கும் கொள்கை அதுவே.

இப்பின்னணியில்தான் பிப்-25 இல் கூடிய 11 கட்சிகள் காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத ஒரு மாற்று அரசை அமைப்போம் என அறைகூவல் விடுத்தன. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக தலைமை தற்போது எங்கிருக்கின்றது போன்ற கேள்விகளுக்கெல்லாம் முதல்வர் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளார்" என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x