

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சுவைமிக்க இடிந்தகரை மீன் கிடைக்க ஏற்பாடு செய்யக் கூடாதா? என பேரவைத் தலைவர் பி.தனபால் கேட்டதால் சிரிப்பலை எழுந்தது.
பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை, ‘‘திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையில் மீன்களைப் பதப்படுத்த குளிர்பதன கிடங்கு அமைக்கப்படுமா?’’ என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘இடிந்தகரையில் குளிர்பதன கிடங்கு அமைக்கும் திட்டம் அரசிடம் இல்லை’’ என்றார்.
தொடர்ந்து பேசிய இன்பதுரை, ‘‘இடிந்தகரையில் கிடைக்கும் மீன்கள் மிகவும் சுவையானவை. எனவே, அங்கு மீன்களைப் பதப்படுத்தி பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும்’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் பி.தனபால், ‘‘சுவைமிக்க இடிந்தகரை மீன்கள் எங்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யக் கூடாதா?’’ என கேட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘மீன்வளத் துறை மானியக் கோரிக்கையின்போது சுவைமிக்க இடிந்தகரை மீன்கள் வழங்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார்.
மீன் தொடர்பான விவாதத்தால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.