Published : 15 Jul 2016 09:35 AM
Last Updated : 15 Jul 2016 09:35 AM

கே.ஜே.ஜேசுதாஸின் இசைப் பள்ளி சார்பில் சென்னையில் ‘செம்பை இசை விழா’ ஆகஸ்ட் 30-ம் தேதி தொடக்கம்: கிருஷ்ண கான சபாவில் 3 நாட்கள் நடக்கிறது

கே.ஜே.ஜேசுதாஸின் தரங்கிணிசரி இசைப் பள்ளி சார்பில் ‘செம்பை இசை விழா’ ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு சென்னை தி.நகர் கிருஷ்ண கான சபாவில் நடக்க உள்ளது.

கிருஷ்ண கான சபா செயலர் ஒய்.பிரபு, சென்னையில் நேற்று கூறியதாவது: புகழ்பெற்ற கர்னாடக இசைப் பாடகர் செம்பை வைத்தியநாத பாகவதரின் பிறந்தநாள் செப்டம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது நினைவைப் போற்றும் வகையில், பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் திருவனந்தபுரத்தில் நடத்திவரும் தரங்கிணிசரி இசைப் பள்ளி சார்பில், ‘செம்பை இசை விழா’ தி.நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில் நடக்க உள்ளது.

ஜேசுதாஸ் உட்பட பல்வேறு இசைப் பிரபலங்களுக்கு குருவாக இருந்தவர் செம்பை வைத்தியநாத பாகவதர். அவரது பெயரிலான இந்த இசை விழா ஆகஸ்ட் 30, 31, செப்டம்பர் 1 ஆகிய 3 நாட்கள் நடக்க உள்ளது. விழாவில் மாம்பலம் சிவா, ஷைலா, விஜய் ஜேசுதாஸ், பிரவீன் கோகிந்தி, சங்கர நம்பூதிரி உட்பட பல்வேறு கலைஞர்கள் பங்கேற்கின்றனர். மூத்த இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் இசை பயிலரங்கமும் நடைபெற உள்ளது. விழாவில் 15 மூத்த இசைக் கலை ஞர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

கே.ஜே.ஜேசுதாஸ் பேசும்போது, ‘‘என் குருவின் ஆசியால்தான், இன்று வரை பாடி, புகழ்பெற்று வருகிறேன். அவருக்கு நன்றி செலுத்தும் விதமாகவே இவ்விழா நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு சில காரணங்களால் இவ்விழாவை நடத்த முடியவில்லை. இனி, ஆண்டுதோறும் அவரது பெயரில் இசை விழா நடத்தப்படும்’’ என்றார்.

செம்பை வைத்தியநாத பாகவதரின் மகன் சீனிவாசன், பாடகர் உன்னி கிருஷ்ணன் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x