தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்துக்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்துக்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Updated on
1 min read

தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 3 ஆம் தேதி நடத்தப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் பரிபூரண ஆதரவளிக்கும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான அறிக்கை வருமாறு:

தமிழக விவசாயிகளின் துயரத்தைப் போக்குவதற்கு மறுத்து, அவர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் “குற்றவாளி” வழிகாட்டும் அதிமுக பினாமி அரசு தத்தளித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகின்ற ஏப்ரல் 3 ஆம் தேதியன்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்த அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

“தேசிய, தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வது, வறட்சி நிவாரணம் வழங்குவதில் சிறு-குறு-பெரு விவசாயிகள் என வித்தியாசம் காட்டாமல் ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் அனைவருக்கும் வறட்சி நிவாரணம் வழங்குவது, விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம்வழங்குவது, காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தல், அண்டை மாநிலங்களிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் உரிமைகளை நிலைநாட்டுவது, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்ட மத்திய அரசுக்கு கண்டனம், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு“ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இந்த வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது.

இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் தமிழக எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னை வந்து சந்தித்து ஆதரவு கேட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் குரல் கொடுத்து வருகிறது. ஆனாலும் மத்திய- மாநில அரசுகள் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை ஒரு பொருட்டாகவே நினைத்து பரிசீலிக்க மறுப்பதால், இன்றைக்கு டெல்லியில் தமிழக விவசாயிகள் பட்டினியும், பசியுமாக கிடந்து தொடர் போராட்டம் நடத்த வேண்டிய அவல நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் உருவாகியிருக்கிறது.

இந்தநிலையில் அல்லல்படும் விவசாயிகளின் துயர் அறவே நீங்குவதற்காக தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் ஏப்ரல் 3 ஆம் தேதி நடத்தப்படும் வேலை நிறுத்தத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தனது பரிபூரண ஆதரவை வழங்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார் ஸ்டாலின்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in