

திருநெல்வேலி மாநகராட்சியிலுள்ள 55 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களில் 18 பேர் பட்டதாரிகள், ஒருவர் டாக்டர். தற்போதைய 31 அதிமுக கவுன்சிலர்களில் துணை மேயர் பூ.ஜெகநாதன் மற்றும் 10 கவுன்சிலர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. மேயர் இ.புவனேஸ்வரிக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இம்மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பெயர்களை அதிமுக தலைமை நேற்று அறிவித்துள்ளது. அதில் 2 பொறியாளர்கள், 2 வழக்கறிஞர்கள், 1 முனைவர் பட்டம் பெற்றவர், 5 முதுகலை பட்டதாரிகள், 8 இளங்கலை பட்டதாரிகள் என்று மொத்தம் 18 பட்டதாரிகள் உள்ளனர். 44-வது வார்டில் திருநெல்வேலி புறநகர் மாவட்ட மருத்துவ அணி துணை தலைவர் டாக்டர் சி.அபாரூபா கனந்தினி நிறுத்தப்பட்டிருக்கிறார். இதுபோல் ஒரு டிப்ளமோ பட்டம் பெற்றவரும் போட்டியிடுகிறார்.
மாநகராட்சி மேயர் புவனேஸ்வரி மாநகராட்சியில் சைவபிள்ளை சமுதாய வாக்குகள் அதிகமுள்ள 39, 40-வது வார்டுகளில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேநேரத்தில் 7-வது வார்டில் மீண்டும் துணைமேயர் ஜெகநாதன் போட்டியிடுகிறார்.
மேயருக்கும், துணைமேயருக்கும் கடந்த பல மாதங்களாகவே பனிப்போர் நிலவிவந்ததால் மாநகராட்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் மேயர் சிக்கியதால் அவருக்கு அதிமுக தலைமை வாய்ப்பு அளிக்கவில்லை என்று அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதுபோல் 10 அதிமுக கவுன்சிலர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கடந்த சட்டப் பேரவை தேர்தலில் பாளையங்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்த ஹைதர் அலி, திருநெல்வேலி மண்டல தலைவர் மோகன் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், தச்சநல்லூர் மண்டல தலைவர் மாதவனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பாளையங்கோட்டை மண்டலத் தலைவர் எம்.சி.ராஜனுக்கு பதில், அவரது தாயார் எம்.மணியம்மாளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த மேயர்
தற்போதைய 18-வது வார்டு தேமுதிக கவுன்சிலர் பி.தானேஸ்வரன், சமீபத்தில் அதிமுகவுக்கு தாவியிருந்தார். அவர் அதே வார்டில் அதிமுகவில் போட்டியிடுகிறார். மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்தின் சகோதரி வெண்ணிலா ஜீவபாரதி 27-வது வார்டில் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் வெற்றிபெற்றால் மேயராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கவுன்சிலர் பரணி சங்கரலிங்கத்துக்கு பதில், அவரது மகன் எஸ்.ஆறுமுகம் 9-வது வார்டில் போட்டியிடுகிறார்.