

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 82 அடியாக குறையும் போது, மேலே தெரிய வேண்டிய உச்சி கோபுரம், அணையின் நீர்மட்டம் 78 அடியாக நேற்று குறைந்த நிலையில், இரட்டை கோபுரத்தின் உச்சி பீடம் தலைக்காட்டியது. இதை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் காவிரியில் பெருக்கெடுத்து செல்லும் நிதி நீர், வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் விதமாக, மேட்டூரில் இரண்டு மலைகளுக்கு இடையே பிரமாண்டமான முறையில் 120 அடி உயரத்தில், மேட்டூர் அணை கட்டுமான பணி 1924ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
மேட்டூர் அணை கட்டுமான பணி மேற்கொண்ட இடத்தில், பண்ணவாடி, கோட்டையூர், நாகமலை உள்ளிட்ட 20 கிராமங்கள், காவிரி நீர் தேக்க பகுதியில் இருந்தது. காவிரி நீர் தேக்கத்தில் வாழ்ந்த மக்கள், வழிபாடு நடத்த ஜலகண்டேஸ்வரர் ஆலயம், 64 அடி உயர நந்தி சிலை, ராஜா மண்டபம், 82 அடி உயரம் கொண்ட இரட்டை கோபுர கிறிஸ்துவ ஆலயம் கட்டியதை இன்றும் காண முடிகிறது. அணையில் நீர் மட்டம் குறைந்து வறட்சியாகும்போது, அங்கு வாழ்ந்த மக்கள் விட்டுச் சென்ற வாழ்விடத்தின் அடிச்சுவடுகளாய், ஆலயம், நந்திசிலை ராஜா மண்டபம் கம்பீரமாக எழுந்து நிற்கும்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82 அடியாக குறையும் போது, இரட்டை கோபுரம் தண்ணீரில் இருந்து மெல்ல வெளியே தெரியும். ஆனால், இந்தாண்டு, நவ., 4ம் தேதி அணையின் நீர் மட்டம் 79 அடியாக குறைந்த நிலையில், இரட்டை கோபுரம் தலைக்காட்டாமல் மாயமாகி விட்டது. எப்போதும், 82 அடியாக நீர் மட்டம் இருக்கும் போது வெளியே தெரியும் இரட்டை கோபுரம், நீர் மட்டம் 79 அடியாக குறைந்தும், உச்சி பீடம் தெரியாத நிலை ஏற்பட்டது.
ஒன்றரை மாதங்களுக்கு பின் மேட்டூர் அணையின் நீர் மட்டம் நேற்று 78 அடியாக குறைந்த நிலையில், இரட்டை கோபுரத்தின் உச்சி பீடம் மெல்ல வெளியே தலைக்காட்டியது. நான்கு அடி உயர உச்சி பீடம் சிதைக்கப்பட்ட நிலையில், வெளியே தெரிந்த பீடத்தை மக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்துச் சென்றனர். நீர் பிடிப்பு பகுதியில் பரிசலில் செல்ல தடை விதிக்கப்பட்டதால், கரையில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் இரட்டை கோபுர உச்சியை பார்த்துச் சென்றனர்.
அணையின் நீர் மட்டம் நேற்று 78.02 அடியாகவும், அணைக்கு வினாடிக்கு 1343 கன அடி தண்ணீர் வரத்தும், டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து வினாடிக்கு 9,410 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.