

தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்படுகிறது.
நாடு முழுவதும் ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய பெயர் சேர்த்தல், இறந்தவர் கள் பெயர் நீக்குதல் போன்ற பணி களை முடித்து, இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் வெளியிடப் படும். தமிழகத்தில் வழக்கமாக ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடப்படுகிறது. அதற்கு முன்னதாக, முந்தைய ஆண்டு செப்டம்பர் மாதம் முதலே, வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
இதில், ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது நிரம்பும் எவரும் வாக்கா ளர் பட்டியலில் தங்கள் பெயர் களை சேர்த்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்படும். வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் தவிர, பெயர் நீக்குதல், இரட்டை பதிவுகளை நீக்குதல், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவையும் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த 2015-ம் ஆண்டை பொறுத்தவரை, செப்டம்பர் மாதம் இப்பணிகள் நடந்து வந்த நிலையில், அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, கனமழையால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. வெள்ள பாதிப்பு காரணமாக, வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணிகளில் இருந்த அலுவலர்கள் மாற்றப்பட்டனர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் உரிய காலத்தில் முடிக்கப்படவில்லை. இதனால், 2016 ஜனவரி 20-ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் 5.79 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தொடர்ந்து, கடந்தாண்டு மே மாதம் தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வந்தது. அத்தேர்தலுக்கு முன், வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டை பதிவுகள், இறந்தவர்கள் பெயர்களை நீக்கிவிட்டு, விடுபட்ட வாக்காளர்கள் பெயர்களை சேர்க்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இரண்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதுடன், வீடு வீடாக வாக்குச்சாவடி அலுவலர்கள் சென்று ஆய்வு நடத் தினர். கல்லூரிகளிலும் புதிய வாக் காளர்கள் பெயர் சேர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, தேர்தலுக்கு முன் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 5.82 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தொடர்ந்து இதன் அடிப்படையி லேயே, உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க தமிழக தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுத்தது.
இதற்கிடையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வழக்கமான வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப் பட்டன. இப்பணிகள் முடிந்த நிலை யில், தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்ததும், ஜனவரி 5-ம் தேதி தமிழகத்தில் இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்படும். மாவட்டங்கள் தோறும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள்’’ என்றார்.