மருத்துவ உயர்சிறப்பு இடங்களுக்கான மாநில இட ஒதுக்கீட்டில் தமிழகம் பாதிப்பு: அன்புமணி

மருத்துவ உயர்சிறப்பு இடங்களுக்கான மாநில இட ஒதுக்கீட்டில் தமிழகம் பாதிப்பு: அன்புமணி
Updated on
2 min read

மருத்துவ உயர்சிறப்பு இடங்களுக்கான மாநில இட ஒதுக்கீட்டிலும் தமிழகம் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களுக்கு, வசிப்பிடம் சார்ந்த (Domicile Reservation) செல்லாது என்றும், இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களின் விண்ணப்பங்களையும் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தமிழக மருத்துவர்களின் மருத்துவ உயர் கல்வி வாய்ப்புகளை பறிக்கும் ஆபத்தான தீர்ப்பாகும்.

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்களில் 15 விழுக்காடும், மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50 விழுக்காடும் அகில இந்திய தொகுப்புக்கு அளிக்கப்பட்டு வருகிறது. உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய தொகுப்பு இல்லை என்பதால் அப்படிப்புகளுக்கான இடங்கள் முழுவதும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தமிழகத்தில் மருத்துவம் படித்த மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன.

இதனால் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் பிற மாநில மாணவர்களின் மருத்துவப் படிப்பு வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன என்ற அநியாயமான கோரிக்கையின் அடிப்படையில் மராட்டியத்தைச் சேர்ந்த சந்தீப் சதாசிவ ராவ் என்ற மருத்துவர் தொடர்ந்த வழக்கில் தான் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

நடப்பாண்டிற்கான உயர்சிறப்பு மருத்துவ மாணவர் சேர்க்கையிலேயே பிற மாநில மாணவர்களுக்கு இடமளிக்க வேண்டும்; இதற்கு வசதியாக விண்ணப்பம் செய்வதற்காக கடைசி நாளை ஜூலை 2-ஆம் தேதியிலிருந்து 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்; இல்லாவிட்டால் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்வுகளுக்கு தடை விதிக்கப்போவதாகவும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். இத்தீர்ப்பு தமிழக நலனுக்கு எதிரானது ஆகும்.

இந்தியாவில் தமிழகத்தில் தான் மருத்துவம், மருத்துவ மேற்படிப்பு மற்றும் உயர்சிறப்பு படிப்புகளுக்கான இடங்கள் அதிகமாக உள்ளன. உதாரணமாக இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 26,430 மருத்துவப் படிப்பு (MBBS) இடங்கள் உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் அதில் 10 விழுக்காட்டுக்கும் அதிகமாக 2810 இடங்கள் உள்ளன.

அதேபோல், மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்பில் நாடு முழுவதும் உள்ள 14,052 இடங்களில் 1163 இடங்கள் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. இந்தியா முழுவதும் உள்ள 1339 மருத்துவ உயர்சிறப்பு இடங்களில் 191 இடங்கள் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. இதற்குக் காரணம் தமிழக மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டிருப்பது தான். இதன் பலனை தமிழக மாணவர்கள் அனுபவிப்பது தான் இயற்கை நீதியாகும்.

மாறாக தமிழக மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளில் பிற மாநில மாணவர்களுக்கு இடம் வழங்க வேண்டும் என்பது மிகப்பெரிய சமூக அநீதி என்பதில் ஐயமில்லை.

வசிப்பிடம் சார்ந்த இட ஒதுக்கீட்டு விஷயத்தில் தமிழகத்திற்கு திட்டமிட்டு அநீதி இழைக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள மத்திய உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மாநில அரசின் நிலம் மற்றும் நிதியுதவியுடன் தான் அமைக்கப்படுகின்றன. அவ்வாறு அமைக்கப்பட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் சில மாநிலங்களில் மட்டும் மாநில இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ஆனால், திருவாரூரிலுள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் மாநில இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. பிற உயர் கல்வி நிறுவனங்களிலும் மாநில ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இன்று வரை கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால், தமிழகத்தின் உயர் கல்வி இடங்களை மட்டும் பகிர்ந்துகொள்ள அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

மருத்துவ உயர்சிறப்பு இடங்களுக்கான வசிப்பிடம் சார்ந்த இட ஒதுக்கீட்டிலும் தமிழகம் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் போலவே ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவிலும் உயர்சிறப்பு படிப்புகளுக்கான இடங்கள் பிற மாநிலத்தவருக்கு வழங்கப்படுவதில்லை. இதற்காக அங்கு சிறப்பு சட்டம் இயற்றப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி, அம்மாநிலங்களில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஆனால், தமிழகத்திற்கான இடஒதுக்கீடு மட்டும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது இயற்கை நீதிக்கு எதிரானது ஆகும். தமிழ்நாட்டில் தமிழக மக்களுக்காக அவர்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி இடங்களை மற்ற மாநிலத்தவருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. இதிலிருந்து தமிழகம் பாதுகாக்கப்பட வேண்டும்.

எனவே, ஆந்திரம், தெலுங்கானா மற்றும் ஜம்மு & காஷ்மீரில் இருப்பதைப் போன்று தமிழகத்திலும் மருத்துவ உயர்சிறப்பு இடங்கள் தமிழக மாணவர்களுக்கே சொந்தம் என்பதை உறுதி செய்வதற்கான சட்டத்தை வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in