

பள்ளிக்கரணை பகுதியில் முன் கூட்டியே அறிவிக்காமல் அடிக்கடி மின் தடை செய்யப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாவதாக, உங்கள் குரலில் வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வெயில் அதிகரித்து வருவதால், மின் பயன்பாடும் அதிகரிக்கிறது. இங்கு போதுமான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்பட்டாலும், சில பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் தடைகள் தொடர்கின்றன.
இது தொடர்பாக ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை வழியாக, பள்ளிக்கரணையைச் சேர்ந்த வாசகர் பி.எஸ்.சேஷாத்ரி கூறிய தாவது:
எங்கள் பகுதியில், கடந்த பல நாட்களாக ஒரு மணி நேரம், அரை மணி நேரம் என ஒரு நாளில் பலதடவை மின் தடை இருந்தது. இது தொடர்பாக மின் வாரியத்திடம் கேட்டால் எந்த பதிலும் இருக்காது. தொடர்ந்து பலமுறை தொடர்பு கொண்டால் தடையை நீக்குவதற்கான பணிகள் நடப்பதாக கூறுவார்கள். தற்போது 10 நிமிடங்கள், 15 நிமிடங்கள் என்ற அளவில் மின்தடை ஏற்படுகிறது. அதிக பயன்பாடு காரணமாக குறைந்த மின் அழுத்தமும் ஏற்படுகிறது. இதனால் கோடை காலத்தில் வீட்டில் இருக்கும் முதியோர்களும், குழந்தைகளும் அவதிக்குள்ளாகிறார்கள்’’ என் றார்.
இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அதிக வெப்பம் காரணமாக பகல் வேளையில் கூட பலர் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துகின்றனர். இதனால், மின் அழுத்தம் அதிகரித்து பீடரில் சிக்கல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் பணியில் தொடர்ந்து நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். தானாகவே பயன்பாடு அதிகரிக்கும் பகுதியில் ‘டிரிப்’ ஆகும் போது உடனடியாக அதை சரிசெய்து வருகிறோம்’’ என்றனர்.