Published : 12 Jun 2016 01:34 PM
Last Updated : 12 Jun 2016 01:34 PM

காட்டுப்பன்றி, மயிலால் பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பவில்லை என தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

காட்டுப்பன்றி, மயில் போன்றவற்றால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வனத்தை யொட்டியும், வனத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவுவரை உள்ள விளைநிலங்களிலும் காட்டுப்பன்றிகள் புகுந்து விளைபொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. சைவப்பட்சிகளான இவை விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்பு, நெல், சேனைக்கிழங்கு, மக்காச்சோளம், நிலக் கடலை, எள், மரவள்ளிக்கிழங்கு போன்ற விளைபொருட்களை சேதப்படுத்தி வருகின்றன.ஆண்டுக்கு 20 குட்டிகள் வரை போடும் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக விளைநிலங்களை சேதப்படுத்துவதால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர். சில நேரங்களில் இவை உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.

மயில்களால் பாதிப்பு

வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி பிரிவு 4-ல் காட்டுப்பன்றி இடம்பெற்றுள்ளது. இதனை கொல்வது சட்டப்படி தவறு என்பதால் வனத்துறையினரின் நடவடிக்கைக்கு பயந்து காட்டுப்பன்றிகளை விவசாயிகள் ஒன்றும் செய்ய முடியாத நிலை உள்ளது. காட்டுப்பன்றியால் ஏற்படும் சேதத்திற்கு வனத்துறை கணக்கீடு செய்து இழப்பீடு வழங்கி வந்தாலும், அவை விவசாயிகளுக்கு உரிய பலனை அளிக்காத நிலை உள்ளது.

இதேபோல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை, காஞ்சிகோயில், நசியனூர், சென்னிமலை அரச்சலூர், மொடக்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் விளை நிலங்களில் பயிரிடப்படும் தானியங்கள், காய்கறி, பழம் என அனைத்தையும் மயில்கள் சேதப்படுத்தி வருகின்றன. இவற்றை தடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து குரல் எழுப்பியும், கவன ஈர்ப்பு ஆர்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

அறிக்கை அனுப்பவில்லை

இந்நிலையில், விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகள் குறித்த விபரத்தை மாநில அரசுகளிடம் இருந்து பெற்ற மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறை அமைச்சகம், அதன் அடிப்படையில் சில விலங்குகளை கொல்ல அனுமதி அளித்துள்ளது. இதன்படி பிஹாரில் நீலா மான்களையும், மேற்கு வங்கத்தில் யானைகளையும், இமாச்சலபிரதேசத்தில் குரங்குகளையும், கோவாவில் மயில்களையும், சந்திரபூரில் காட்டுப்பன்றிகளையும் கொல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் வன விலங்குகளால் 16 மாவட்ட விவசாயிகள் பாதிப்பு அடைந்து வரும் நிலையில், மத்திய அரசுக்கு இது குறித்த அறிக்கையை தமிழக அரசு அனுப்பவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர் விவசாயிகள். அவ்வாறு அனுப்பி இருந்தால் விளை நிலங்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கொல்ல மத்திய அரசின் அனுமதி கிடைத்திருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் நடத்த முடிவு

இதுகுறித்து ஈரோடு மாவட்டம் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன சபை தலைவர் சுபி.தளபதி கூறியதாவது:

விவசாய நிலங்களை பாழ்படுத்தும் விலங்குகள் எந்தெந்த பகுதியில் உள்ளன, அவற்றின் எண்ணிக்கை, அவற்றால் ஏற்பட்ட உயிர் சேதம், பயிர்சேதம், வழங்கப்பட்ட இழப்பீடு, தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை குறித்த விபரத்தை அனுப்பி வைக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. பிஹார், மேற்குவங்கம், கோவா, இமாச்சலபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட பல மாநில அரசுகள் வனவிலங்குகளின் பாதிப்பு குறித்து அறிக்கை அனுப்பின.

ஆனால், தமிழக அரசின் சார்பில் அறிக்கை அனுப்பப்படவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன் கோவை வந்திருந்த மத்திய அமைச்சர் ஜவடேகர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

வனவிலங்குகளால், குறிப்பாக காட்டுப்பன்றி, மயில் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கிராமசபை தீர்மானம், கருத்து கேட்பு கூட்டம், நீதிமன்றத்தில் வழக்கு, விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் முறையீடு, கவன ஈர்ப்பு போராட்டங்கள் என பல வழியில் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பாமல் மெத்தனம் காட்டியுள்ளது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட விவசாய அமைப்புகளுடன் பேசி மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ‘காட்டுப்பன்றிகளால் ஏற்படும் சேதம் மற்றும் எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு உள்ளது என்பது குறித்து மாவட்ட வாரியாக அரசு சார்பில் அறிக்கை கேட்டு பெறப்பட்டது. ஆனால் இந்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதா என்பது குறித்த விபரம் தெரியவில்லை’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x