

விண்ணப்பித்த அனைவருக்கும் விவசாய மின் இணைப்பு வழங்க ரூ. 7 ஆயிரத்து 300 கோடி தேவை என மின் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற மின்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் எ.வ.வேலு (திருவண்ணாமலை), ‘‘தமிழகம் மின் மிகை மாநிலமாகி விட்டது என்கிறீர்கள். ஆனால், விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ள 4 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்காதது ஏன்?’’ என கேள்வி எழுப்பினார்.
அவருக்கு பதிலளித்த அமைச் சர் பி.தங்கமணி, ‘‘விவசாய பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்க ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை மின் வாரியத்துக்கு செலவாகிறது. இதுவரை விண்ணப்பித்துள்ள 4 லட்சம் பேருக்கும் மின் இணைப்பு வழங்க ரூ. 7 ஆயிரத்து 300 கோடி தேவை. இந்த அளவு தொகையை ஒரே நேரத்தில் ஒதுக்கீடு செய்ய முடியாது. எனவேதான் படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது’’ என்றார்.