நத்தை வேகத்தில் நடைபெறும் சிப்காட் தொழிற்பேட்டை பணிகள்

நத்தை வேகத்தில் நடைபெறும் சிப்காட் தொழிற்பேட்டை பணிகள்
Updated on
2 min read

"ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை வட்டம் கண்ணுடையான்பட்டி அருகே 1100 ஏக்கர் பரப்பளவில் 107 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசின் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். இதனால் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்" என தமிழக முதல்வர் ஜெயலலிதா மார்ச் மாதம் அறிவித்தார். அந்தப் பணிகள் நத்தை வேகத்தில் நகர்வதாகச் சொல்லிக் கவலைப்படுகின்றனர் தொழில் முனைவோர்கள்.

இதற்கிடையே இந்த தொழிற்பேட்டைக்கு எதிராக விவசாயிகளில் ஒரு பிரிவினர் எதிர்ப்புக் குரல் கொடுத்துவரு வதாலும் தொழிற்பேட்டை துவங்கும் பணி மேலும் தாமதமாகும் நிலை உருவாகியுள்ளது.

தனது ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை வட்டம் மொண்டிப்பட்டியில் 1200 கோடி ரூபாய் மதிப்பில் காகித அடுக்கு அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஜூன் 3-ம் தேதி திருச்சிக்கு வந்த முதல்வர், காகித அட்டை ஆலை அமைய உள்ள இடத்துக்கு அருகில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான திட்டத்தையும் தொடங்கிவைத்தார். காகித அடுக்கு அட்டை ஆலைக்கு கிளம்பிய எதிர்ப்பு போல் இப்போது இந்த தொழிற்பேட்டை தொடர்பாகவும் போராட்டம் வெடித்துள்ளது.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சிப்காட் தொழிற்பேட்டைக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்து வதைக் கண்டித்து திங்கள்கிழமை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு கோஷ மிட்டனர்.

இந்த சங்கத்தின் மாநிலத் தலைவரான விஸ்வநாதன் நம்மிடம் பேசுகையில், "இந்தப் பகுதியில் தரிசாக, மேடு பள்ளமாக இருந்த நிலங்களை சமப்படுத்தி, சீர்செய்து சுமார் ஐம்பது ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

முப்போகம் விளையும் நிலங்கள் அங்கே உள்ளன. இந்த நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்து வருவதை யறிந்து நில உரிமையாளர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றனர்.

விளைநிலங்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் அரசு தொழிற்பேட்டையை அமைக்க வேண்டும். அப்படி கட்டாயம் அந்த நிலங்கள் தேவை என்றால் ஏக்கருக்கு 8 லட்ச ரூபாய் இழப்பீடு தொகையும், நில உரிமையாளரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்" என்றார்.

சிப்காட் பணிகள் மிகவும் மந்தமாக நடப்பதற்குக் காரணம் என்ன? வருவாய்துறை அலுவலர் ஒருவர் நம்மிடம் கூறிய தகவல் இது:

"கண்ணுடையான்பட்டியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க இந்த ஆண்டு மே மாதம்14-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதில் இந்தப் பணிகளை செய்வதற்காக போதிய பணியாளர்கள் இதுவரை நியமனம் செய்யப்படவில்லை.

எட்டு நில அளவையாளர்கள் தேவைப்படுகிற இடத்தில் ஒரேயொரு நில அளவையாளர் மட்டுமே இப்போது இருக்கிறார். இதனால் திட்டத்துக்குத் தேவைப்படும் நிலங்களைக்கூட இதுவரை முழுமையாக சர்வே செய்ய முடியவில்லை.

சர்வே செய்யும் பணியில் இப்போது நான்கில் ஒரு பங்குதான் நடந்து முடிந்துள்ளது. இதற்கே ஆறு மாதம் ஆகிவிட்டது. இதே வேகத்தில் போனால் இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆனாலும் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வராது" என்றார் வேதனையுடன்.

சிப்காட் திட்ட சிறப்பு வட்டாட்சியர் லீலாவதி நம்மிடம் கூறியதாவது:

"சிப்காட் திட்டத்துக்குத் தேவையான நிலங்களை அளக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் தேவையான பணியாளர்களை அரசு நியமித்து இந்தப் பணிகளை விரைவாக செய்து முடிக்கும். விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் நில ஆர்ஜிதம் செய்ய நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

மிகவும் பின்தங்கிய பகுதியான மணப்பாறையில் சிப்காட் தொழில் பேட்டை அமைவதால் அப்பகுதி வேகமாக முன்னேறும். முதல்வர் அதற்கான பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் அவரது தொகுதி மக்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in