

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் விசாரணையின்போது இளைஞர் ஒருவர் போலீஸ் எஸ்.ஐ.யை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டதில் இந்த இளைஞர் உயிரிழந்தார்.
எஸ்.பி. பட்டினத்தைச் சேர்ந்தவர் மெக்கானிக் சையது முகம்மது (24). திருமணம் ஆகாதவர். இவரது நண்பர் ஷாலி, எஸ்.பி. பட்டினம் காவல் நிலையம் எதிரே உள்ள இரு சக்கர வாகன ஒர்க் ஷாப்பில் தனது பைக்கை பழுது பார்க்க கொடுத்திருந்தார். அந்த ஒர்க்-ஷாப்பின் உரிமையாளர் அருள்தாஸிடம், ஷாலியின் வாகனத்தை தருமாறு நேற்று சையது முகம்மது கேட்டுள்ளார். அதற்கு, ஷாலி வந்தால்தான் வாகனத்தை தர முடியும் அருள்தாஸ் தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அருள்தாஸை, சையது முகமது கத்தியால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எஸ்பி பட்டினம் காவல் நிலையத்தில் அருள்தாஸ் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சையது முகம்மதுவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று லாக்கப்பில் அடைத்தனர்.
ராமநாதபுரத்துக்கு பணி விஷயமாக சென்ற எஸ்.ஐ. காளிதாஸ் (30) நேற்று மாலை காவல் நிலையம் வந்தார். அவர் லாக்கப்பில் இருந்த சையது முகம்மதுவை அழைத்து விசாரித்துள்ளார். அப்போது சையது முகம்மதுவிடம் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட கத்தியை போலீஸார் எஸ்.ஐ.யின் மேஜை மீது வைத்திருந்தனர்.
தொடர் விசாரணையால் ஆத்திரம் அடைந்த சையது முகமது, அந்த கத்தியை எடுத்து எஸ்.ஐ.யை சரமாரியாகக் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் எஸ்.ஐ.க்கு வயிறு மற்றும் கையில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்ததாக தெரிகிறது. அவரை மீண்டும் கத்தியால் குத்த சையது முகம்மது முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து எஸ்.ஐ. தன்னிடம் இருந்து துப்பாக்கியை எடுத்து சையது முகமதுவை நோக்கி 3 முறை சுட்டார். இதில் 2 குண்டுகள் மார்பிலும், ஒரு குண்டு கையிலும் பாய்ந்த நிலையில் சையது முகம்மது சுருண்டு விழுந்தார்.
உடனே ஆம்புலன்ஸ் மூலம் எஸ்ஐயும், சையது முகம்மதுவும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் சையது முகம்மது ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எஸ்.ஐ.க்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, அருள்தாஸ் புகாரின் பேரில் சையது முகம்மது மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் முனைப்பில் எஸ்.ஐ. தற்காப்புக்காக சுட்டதில் சையது முகம்மது இறந்துவிட்டார். இது குறித்து கோட்டாட்சியரின் விசாரணை நடத்தப்படும் என்றார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சையது முகம்மதுவின் உறவினர்கள் எஸ்.பி. பட்டினம் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத் துக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். மறியலில் ஈடுபட்டவர்களுடன் அவர் பேச்சு நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததால் மறிய லில் ஈடுபட்டவர்களை போலீஸார் விரட்டியடித்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. பாது காப்புப் பணியில் நூற்றுக்கணக்கான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.