

ரயில்வேயில் 55 வயதான அல்லது 30 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதற்கு ரயில்வே தொழிற் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
2014-ம் ஆண்டின் கணக் கெடுப்பின்படி மத்திய அரசு ஊழியர்களில் 50 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 9.48 லட்சம் பேர். இதில், ரயில்வே துறையில் தற்போது மொத்தமுள்ள 13.16 லட்சம் ஊழியர்களில் 4.94 லட்சம் பேர் இந்த வயதுக்கு உட்பட்டவர்கள்.
இதனிடையே, ரயில்வேயில் தகுதி அளவுகோல் அடிப்படை யில் ஊழியர்களைப் பணியில் தொடர அனுமதிக்கவும், மற்றவர் களுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாகத் கூறப்படுகிறது. கடந்த 6-ம் தேதி தெற்கு ரயில்வே தலைமைக் கணக்கு அதிகாரி வெளியிட்ட அவசர உத்தரவு, இதை உறுதிப் படுத்தும் வகையில் இருப்பதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறியதாவது: தெற்கு ரயில்வே தலைமைக் கணக்கு அதிகாரி வெளியிட்ட உத்தரவில், ‘ரயில்வே துறையில் 55 வயதான அல்லது 30 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் தொடர்பாக பணிப் பதிவேடுகளை ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி, உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரயில்வேயில் அதிக ஆண்டு கள் பணியாற்றி வருவோருக்கு கூடுதல் ஊதியம், சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளித்து, அந்த இடங்களில் புதிதாக நியமிக்கப்படுவோருக்கு குறைவான ஊதியமும், சலுகை களும் கொடுத்தால் போதும் என்றும், இதன்மூலம் பல கோடி ரூபாய் மிச்சமாகும் எனவும் ரயில்வே நிர்வாகம் கருதுகிறது.
இதற்காக, பணிப் பதிவேட்டில் தொழிலாளர்கள் பெற்ற ஊதிய உயர்வு நிறுத்த தண்டனைகள், அதிகாரிகளின் குறிப்புகள் போன்றவற்றை பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அரசு பொதுத் துறை நிறுவனமான ரயில்வே, 55 வயதான அல்லது 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்க திட்டமிட் டிருந்தால், அந்த நடவடிக்கையை கைவிட வேண்டும். இல்லை யெனில் தீவிர போராட்டத்தில் இறங்குவோம் என்றார்.
இதுகுறித்து பொன்மலை பணிமனை எஸ்ஆர்எம்யு துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் கூறியதாவது: 25 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே துறையில் 19 லட்சம் பேர் பணியாற்றினர். ரயில்களின் எண்ணிக்கை, ரயில் வழித்தடம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது சுமார் 13 லட்சம் பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
11,000 பேர் பணியாற்றி வந்த பொன்மலை பணிமனையில், தற்போது 5,000 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதுபோல, பல லட்சம் காலி இடங்கள் ரயில்வே துறையில் உள்ள நிலையில், 55 வயதான அல்லது 30 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் எஸ்ஆர்எம்யு போராட்டத்தில் ஈடுபடும்” என்றார்.