

தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களின் பிரச்சினையை சுமூகமாக தீர்த்திட தமிழக அரசின் உதவி இன்றியமையாதது என்று மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
சென்னையில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அவர் பேசியது:
4 ஆண்டுகளாக இந்திய -இலங்கை மீனவர்களிடையே மத்திய அரசின் துணையோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்கள் தங்களுக்குள் பேசி யார் எப்போது மீன்பிடிக்க செல்வது என்று முடிவு செய்து கொள்வார்கள். கடந்த மூன்றாண்டில் இரண்டு முறை பிரச்சினை எழுந்தபோது அவர்கள் சுமூகமாக தீர்த்துக் கொண்டார்கள். நாளொன்றுகு 4,000 எந்திரப் படகுகள்
எந்தவித பிரச்சினையும் இன்றி இயங்குகின்றன. ஆனால் தமிழக அரசின் துணையில்லாமல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. இவ்விவகாரத்தில் தமிழக அரசுடன் மத்திய அரசு துணை நிற்கும் என்றார்.
பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியது:
கச்சத்தீவு பிரச்சினையில் மந்தமாக செயல்படுவதாக ஐமு.கூட்டணி கட்சிகள் புகார் தெரிவிக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். ஜனநாயகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் தனது கருத்தை சொல்ல உரிமையுண்டு. கூட்டணி என்பது தேர்தலுக்காக அமைக்கப்படுவது என்பதால் மாற்று கருத்துகள் எழுவது இயல்பு தான் என்றார்.
இலங்கை மாகாண சபைத் தேர்தலில் தமிழர்கள் வெற்றி பெற்றால் சிங்களர்களுக்கு இணையான சம உரிமை தமிழர்களுக்கும் கிடைக்கும். அது நிலம், காவல் துறை, கல்வி உள்ளிட்ட 37 அதிகாரங்களை கொண்ட மாநில முதலமைச்சருக்கு இணையான பதவியாக அமையும் என்றார்.