கோவை முகாமில் தயார் நிலையில் 4 கும்கிகள்: 3 காட்டு யானைகளையும் தனிமைப்படுத்தும் பணி தொடக்கம்

கோவை முகாமில் தயார் நிலையில் 4 கும்கிகள்: 3 காட்டு யானைகளையும் தனிமைப்படுத்தும் பணி தொடக்கம்
Updated on
2 min read

கோவையில் மதுக்கரை ஒற்றை யானையைப் பிடிப்பதற்காக டாப் சிலிப் யானைகள் முகாமிலிருந்து கலீம் என்ற கும்கி யானை கோவைக்கு அழைத்து வரப்பட் டுள்ளது. ஒன்றாக சுற்றித்திரியும் 3 காட்டு யானைகளயும் தனிமைப் படுத்துவதற்கான பணிகளை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர்.

கோவை மதுக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைநிலங்களில் சேதம் ஏற்படுத்தி வரும் ஒற்றை ஆண் யானையை பிடிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அந்த யானையைப் பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு ‘மிஷன் மதுக்கரை மகராஜ்’ எனப் பெயரிட்டு, ஒற்றை யானையை பிடிப் பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

முதுமலையிலிருந்து விஜய், சாடிவயலிலிருந்து பாரி, சுஜய் கும்கி யானைகள் கோவை நவக்கரை முகாமுக்கு கொண்டு வரப்பட்டன. இறுதியாக, நேற்று பொள்ளாச்சி வனக்கோட்டம் டாப்சிலிப் அடுத்துள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமிலிருந்து கலீம் (49) என்ற கும்கி யானை நவக்கரைக்கு அழைத்து வரப்பட்டது. இதில் கலீம், அனுபவத்திலும், வயதிலும் மூத்தது என்பதால், அதுவே இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உள்ளது. இதனிடையே நேற்று காலை 6.30 மணிக்கு ‘மிஷன் மகராஜ்’ ஒற்றை யானையுடன், மற்ற 2 காட்டு யானைகளும் வனத்திலிருந்து வெளியேறின. அவற்றை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கும்கிகள் தயார் நிலையில் இருப்பதால், காட்டு யானைகள் மூன்றையும் தனிமைப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் வனத்துறையினர் கூறுகின்றனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘3 யானைகளில் வெடிச்சத்தம் மூலம் 2 யானைகளை விரட்ட முடியும். ஆனால் ‘மிஷன் மகராஜ்’ ஒற்றை யானைக்கு வெடிச்சத்தம் மட்டும் போதாது. சமவெளிப் பரப்பில் அவற்றை தனித்தனியே பிரித்து, அதிலிருந்து ஒற்றை யானையை பிடிக்க முயற்சிக்க உள்ளோம். டாப்சிலிப், முதுமலை, கோவையின் பெரியநாயக்கன்பாளையம் சரகத்திலிருந்து தேர்ந்த வனத்துறை வல்லுநர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவை வந்து செல்லும் பகுதியில் தீவனங்களை ஏற்படுத்தி வைத்துள்ளோம். 3 யானைகளும் ஆண் யானைகளாகவே இருப்பதால் நீண்ட நேரம் அவை ஒன்றாக இருக்காது. அதேசமயம் இத்திட்டம் எப்போது முடியுமென்பதையும் கூறமுடியாது; அதற்கு கால நிலையும் ஒத்துழைக்க வேண்டும்’ என்றனர்.

கடந்த 2011, ஜூலையில் கோவையில் ரேடியோகாலர் பொருத்தும் முயற்சியில் மயக்க ஊசி செலுத்தப்பட்ட யானை ஒன்று கீழே விழுந்து உயிரிழந்தது. அதில் யானையின் எடை 5 டன் எனக் கணக்கிட்டு, அதற்கேற்ப மருந்து செலுத்தப்பட்டதாகவும், ஆனால் இறுதியில் யானையின் எடை 3.5 டன் மட்டும் இருந்ததாகவும் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோன்ற விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பது வனவிலங்கு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

‘நண்பர்கள் அதிகரிப்பு’

மதுக்கரை ராணுவ முகாமையொட்டியுள்ள வனப்பகுதியில் 2 யானைகளின் துணையுடன் சுற்றி வந்த ஒற்றை யானையுடன், மேலும் சில யானைகள் இணைந்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று மாலை 6 யானைகள் உள்ள கூட்டத்தில் ஒற்றை யானை தென்பட்டதாக கூறப்படுகிறது. தனியாக இருந்த அந்த யானையைப் பிடிக்க 3 கும்கிகள் அழைத்து வரப்பட்டவுடன், ஒற்றை யானை தன்னுடன் 2 யானைகளை சேர்த்துக் கொண்டது. தற்போது கும்கிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்த நிலையில், ஒற்றை யானையும் தனது நண்பர்கள் வட்டத்தை வலுப்படுத்துவதாக அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in