

நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸுடன் இனி கூட்டணி இல்லை என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. திமுக அறிவிப்பால் தமிழகத்தில் இனி காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றார்.
டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை தமிழகத்தில் எந்த கட்சி ஏற்கிறதோ அந்தக் கட்சியுடனே கூட்டணி என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பில்லை:
அதிமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி அமையாது. ஒரே கூட்டணியில் இரண்டு பிரதமர் வேட்பாளர்கள் இருக்க கூடாது என்பதால் இந்த முடிவு என அவர் கூறினார்.
மதிமுகவுடன் பேச்சு:
அதிமுக, திமுக கட்சிகளுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என தெரிவித்த அவர் மதிமுகவுடன் பாஜக கூட்டணி சேர வாய்ப்பிருப்பதாக கூறினார். அண்மையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்ததை குறிப்பிட்டார்.