Published : 28 Apr 2016 12:48 PM
Last Updated : 28 Apr 2016 12:48 PM

வீட்டுக்கு ஒரு பெண் பட்டதாரிக்கு அரசு வேலை: மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

வீட்டுக்கு ஒரு பெண் பட்டதாரிக்கு அரசு வேலை, விவசாய கடன்கள் உடனே ரத்து, தாய்மொழி கல்வி கட்டாயம், சாதி மறுப்பு திருமணத்துக்கு சலுகைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை.

மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச் செயலாளரும் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ சென்னையில் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டார்.

மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கத்தை கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கின. இந்தக் கூட்டியக்கம், மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தேர்தல் அணியாக உருவானது. அப்போதே குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை வெளியிட்டனர்.

பின்னர், மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளும் இணைந்து பலமான 3-வது அணியை உருவாக்கியுள்ளன. தேமுதிக, தமாகா கட்சிகள் ஏற்கெனவே தங்கள் தேர்தல் அறிக்கையை தனித்தனியாக வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் பிற்பகல் 12.30 மணியளவில் தேர்தல் அறிக்கையை வைகோ வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை 130 தலைப்புகளில், 80 பக்கங்கள் கொண்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:

* ஒரு கட்சி ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, கூட்டணி அரசு அமைக்கப்படும்.

* அதிமுக திமுக உண்மையான மக்கள் நல அரசாக இல்லாமல் கார்ப்பரேட் ஆதரவு அரசாகவே இயங்கின. உண்மையான மக்கள் நல அரசை தேமுதிக - மநகூ- தமாகா ஆட்சி வழங்கும்.

* விவசாய கடன்கள் உடனே ரத்து செய்யப்படும். விவசாயிகளுக்கு கடன் நிவாரணச் சட்டம் மற்றும் திட்டம் உருவாக்கப்படும்.

* வேளாண் உற்பத்தி அதிகரிக்கப்படும்.

* அனைத்து நிலைகளிலும் கல்வி இலவசமாக வழங்கப்படும்.

* லோக் ஆயுக்தா சட்டம் அமல்படுத்தப்படும்.

* உலக வர்த்தக ஒப்பந்தம், உள்நாட்டுத் தொழில்களை நாசப்படுத்துகிறது. மக்கள் விரோதக் கொள்கைகளை மக்கள் நலக் கூட்டணி எதிர்க்கும்.

* தனியார் துறையில் இட ஒதுக்கீட்டுக்காக சட்டத் திருத்தம்.

* உள்நாட்டு மீனவர்களுக்கு மீன்பிடி குத்தகை கட்டாயமாக்கப்படும்.

* கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கையருக்கு இட ஒதுக்கீடு.

* சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கபட்டுள்ள கடன்கள் ரத்து செய்யப்படும்.

* பட்டியலினத்தோர் துணைத்திட்ட நிதியில், சிறப்பு கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்.

* மின்னணுக் கழிவுகளை அகற்ற, மறுசுழற்சி செய்ய நடவடிக்கை.

* கல்லூரி, வேலை வாய்ப்பில் 25 மரம் நட்டு பராமரிப்பவர்களுக்கு ஒரு மதிப்பெண் என்ற அடிப்படையில் முன்னுரிமை மதிப்பெண்கள் வழங்கப்படும்.

* அரசுப் பேருந்து, ஆம்னி பேருந்துகள் கட்டணம் குறைக்கப்படும்.

* 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு பால் விநியோகம் இலவசம்.

* காவேரி டெல்ட்டா பகுதி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.

* தமிழ் ஆய்வுக்க உலக நாட்டு பல்கலைக் கழகங்களில் தமிழ் ஆய்வு இருக்கைகள் ஏற்படுத்துவோம்.

* வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அமைச்சகம் அமைக்கப்படும்.

* பொதுக் கணக்குக் குழு அமைத்து அரசு திட்டங்களை மக்கள் கண்காணிக்க ஏற்பாடு.

* மக்கள் பிரச்சனைகளை துணிவோடு வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு அங்கீகாரம்.

* முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும். சசிபெருமாள் மது ஒழிப்பு இயக்கம் உருவாக்கப்படும்.

* மக்களை நாடி அரசு என்ற வகையில், அரசு நிர்வாகத்தில் மாற்றம்.

* அரசு விழாக்கள், கட்சி சார்பற்ற விழாக்களாக நடக்க விதி வகுப்போம்.

* நெறிமுறைக் குழு அமைத்து, பல்துறை அறிஞர்கள் கண்கானிப்புடன் கூடிய கூட்டணி அரசு அமைப்போம்.

* உண்மையான மக்கள் நல அரசை ஏற்படுத்துவோம், கார்ப்பரேட் சேவகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்.

* சிறு தொழில் பாதுகாப்புக்கு வழிவகுக்கப்படும்.

* மாணவர்களின் கடன் தள்ளுபடி.

* பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு ரத்து செய்யப்படும்.

* மாணவர்களுக்கான தனி பேருந்துகள்.

* இலவசமான சுத்திகரிக்கபட்ட குடிநீர் வழங்கப்படும்.

* மீனவர் நலன் பாதுகாக்கப்படும்.

* வணிகர்களுக்கு ஒற்றை சாளர முறைப்படி எளிமையான முறையில் உரிமம் வழங்கப்படும்.

* இஸ்லாமிய கைதிகள் விடுதலை முயற்சிக்கப்படும்.

* மத வன்முறைகள் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும்

* சில்லறை வணிகர் நலன் காக்கப்படும்.

* மதம் மாறிய இஸ்லாமியரை பிற்படுத்த பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்கப்படும்.

* மகளிர் சுய உதவி கடனை அரசே செலுத்தும்.

* திருநங்கைகளுக்கு தனி வாரியம், பாதுகாப்பான அடுக்குமாடிக் குடியிருப்புகள்

* அனைத்து அலுவலகங்களிலும் அம்பேத்கர் படம்

* ஆரம்ப சுகாதார நிலையங்களில் மனநல சிகிச்சை

* மின்னணு கழிவுகள் மேலாண்மை

* படித்த இளைஞர்களுக்கு டேட்டா பேஸ்.

* மரம் நடுதல் பேரியக்கம்.

* ஸ்டெர்லைட் நச்சு ஆலை அகற்றம்.

* குளிர்பானங்கள் தயாரிக்க நிலத்தடி நீர் உறிஞ்சுதல் தடுக்கப்படும்.

* சீமைக்கருவேல மரங்கள் ஒழிப்பு

* மாவட்டம் தோறும் பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனைகள்

* கல்விக்கடன்கள் உதவித்தொகைகளை அரசே செலுத்தும்

* தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டப்படும்.

* ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் நல் உறவு பராமரிக்கப்படும்.

* மக்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு பாராட்டுப் பத்திரம்.

* பத்திரிகைகள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் திரும்பப் பெறப்படும்.

* பத்திரிகையாளர்களுக்கு வீடு, மருத்துவ, வட்டியில்லா கடனில் வாகன வசதி.

* இரு மாதங்களுக்கு ஒரு முறை செய்தியாளர்கள் சந்திப்பு.

* சட்டமன்ற நடவடிக்கைகள் இணையத்தில் பதியப்படும்.

* அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் சாதி வேறுபாடுகள் இன்றி வழிபடும் உரிமை நிலை நாட்டப்படும்.

* பஞ்சமி நிலங்களை மீட்டு நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்கப்படும்.

* மலக்குழிக்குள் மனிதர்கள் இறங்கி வேலை செய்யும் அவலம் ஒழிக்கப்படும்.

* மலைவாழ் மக்கள் குறைதீர் கூட்டங்கள்

* அனைத்துப் பழங்குடியினருக்கும் சாதிச் சான்றிதழ்

* ஊராட்சி அலுவலர் முதல் தலைமைச் செயலகம் வரை அரசின் ஒப்பந்தப்பணிகளை கண்காணிக்க பொதுக்கண்காணிப்புக் குழு அமைக்கப்படும். இதில் பொதுமக்கள் அங்கம் வகிப்பார்கள்.

* பத்திரப்பதிவுத்துறையில் நடக்கும் ஊழல்களை ஒழிப்பதற்காக, வருவாய்த்துறையில் நவீன மின்னணு தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்படும். சேவை பெறும் உரிமைச் சட்டம், தகவல் உரிமைச்சட்டம் அமல்படுத்தப்படும்.

* உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை அதிகரிக்க நிபுணர் குழு, உழலை ஒழிக்க ‘புகார் விசாரணை ஆணையம்’ அமைக்கப்படும்.

* கனிம வளக்கொள்ளை தடுக்கப்படும்.

* சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பும், அவர்களுக்கென்று தனி காவல் பிரிவும் உருவாக்கப்படும்.

* தாய்மொழி கல்வி கட்டாயமாக்கப்படும்.

* காவலர்களுக்கு 8 மணி நேர வேலை உறுதி செய்யப்படும்.

* பெண் காவலர்கள் பகல் நேரம் மட்டும் பணி செய்தால் போதும்.

* கரும்பு டன் ஒன்றின் விலை ரூ.4 ஆயிரம், நெல் ஒரு குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 500 என விலை நிர்ணயிக்கப்படும். மாநில விவசாயிகள் ஆணையம் அமைக்கப்படும்.

* மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட விவசாயிகளை பாதிக்கும் திட்டங்கள் நிறுத்தப்படும்.

* நீர்ப்பாசனத்துக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும்.

* முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி 150 நாட்களுக்கு ரூ.250 சம்பளத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். விவசாய வேலைகளும் அதில் அடக்கமாகும்.

* மழை, வெயில் வெள்ளம் போன்றவற்றிலிருந்து சென்னையை பாதுகாப்போம்.

* ஐடி ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை உறுதி செய்யப்படும். முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் இருக்காது.

* மின் துறை ஊழல் ஒழிக்கப்படும். மாதா மாதம் மின் கட்டணம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும்.

* தனியார் பள்ளிகளில் கட்டணக்கொள்ளை ஒழிக்கப்படும்.

* சென்னை, கோவை, தஞ்சை, விழுப்புரம் என 12 இடங்களில் உயர் கல்வி நிலையங்கள் உருவாக்கப்படும்.

* இலவச சிகிச்சை வழங்கவும், உயர் மருத்துவ வசதிகள் ஏற்படுத்துவோம்.

* தொழில்முறை கல்வி கற்றோர் நேர்காணலுக்கு செல்லும் போது அவர்கள் குடும்பத்தினர் நடுகின்ற மரக்கன்றுகளுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

* பேருந்து கட்டணம் குறைக்கப்படும், சுங்கவரி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* படித்து பட்டம் பெற்ற பெண்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை.

* கிராமங்களில் நடமாடும் மருத்துவ சேவை, மினரல் குடிநீர் வழங்கப்படும்.

* நெசவாளர்கள் கடன் தள்ளுபடி செய்யப்படும். ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* நிலமற்ற ஏழை, எளிய விவசாயத் தொழிலாளர்களுக்கு குடும்பத்திற்கு தலா இரண்டு ஏக்கர் நிலம். இரண்டு ஏக்கர் நிலம் வழங்குவது என்பதில் தனித்து வாழும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

* மதவெறியை தடுத்து, சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். சாதி மறுப்புக் காதலர்கள், தம்பதியினரைப் பாதுகாக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்கென தனி காவல் பிரிவு உருவாக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x