

காற்றழுத்த தாழ்வு நிலையால் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர், ''தாய்லாந்து நாட்டு கடலோரப் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுநிலை, தற்போது அந்தமான் அருகே நிலவி வருகிறது. இது மேலும் வலுப்பெற்று, வரும் 5-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது.
மேலும் மாலத்தீவு அருகே நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையால், அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர தமிழகப் பகுதியில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது'' என்று அவர் கூறினார்.