

மின்வாரியப் பணிக்கான நேர்காணலை நட்சத்திர விடுதியில் நடத்துவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு மின்வாரியத்திற்கு உதவிப் பொறியாளர் பணிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் சென்னை அரும்பாக்கத்திலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வரும் 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நேர்காணலில் பெரும் முறைகேடு செய்ய வேண்டும் என்பதைத் தவிர, இதற்கு வேறு நோக்கம் இருக்க வாய்ப்பில்லை. ரூ.1.13 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சென்னை அண்ணாசாலையில் மிகப்பெரிய தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு மாநாடு நடத்தும் அளவுக்கு வசதிகள் உள்ளன. இதுவரை மின்சார வாரியம் சார்ந்த அனைத்து நேர்காணல்களும் அங்கு தான் நடைபெற்றிருக்கின்றன.
அவ்வாறு இருக்கும் போது, உதவி பொறியாளர்களுக்கான நேர்காணலை நட்சத்திர விடுதியில் நடத்த வேண்டிய தேவை என்ன? தேசிய அளவிலோ, மாநில அளவிலோ எந்த பணிக்கான நேர்காணலும் நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற வரலாறு இல்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவிக்கான நேர்காணல் கூட சம்பந்தப்பட்ட அமைச்சகத்தில் தான் நடந்ததே தவிர, நட்சத்திர விடுதியில் அல்ல.தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர் நியமனங்களைப் பொறுத்தவரை நேர்காணல்களில் தான் மிக அதிக அளவில் முறைகேடுகள் நடக்கின்றன.
எனவே, தனியார் நட்சத்திர விடுதியில் 13-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நேர்காணல்களை மின்வாரியத் தலைமை அலுவலகத்துக்கோ அல்லது அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கோ மாற்ற வேண்டும். அனைத்து பணியாளர்களையும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்க வகை செய்ய வேண்டும்.
இதை செய்யத் தவறினால், வரும் 13-ம் தேதி முதல் நேர்காணல் நடைபெறவிருக்கும் சென்னை அரும்பாக்கம் தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவார்கள்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.