

வேலூர் அருகே விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறி 7 சடலங்களுடன் உறவினர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரணாம்பட்டு அடுத்த பல்லல குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் அணைக்கட்டு அருகே உள்ள வரதலம்பட்டு கிராமத்தில் இறந்த முனுசாமி என்பவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள மினி லாரியில் புறப்பட்டனர். இவர்கள் சென்ற மினி லாரி ஓங்கப்பாடி அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் கவிழ்ந்தது. இதில், லாரியில் பயணம் செய்த 7 பேர் இறந்தனர். 35 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இறந்தவர்களின் உடல்கள் நேற்று முன்தினம் மாலை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நேற்று மாலை பல்லலகுப்பம் சுடுகாட்டில் 7 பேரின் உடல்களை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டன.
இதற்கிடையில், இறந்தவர் களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும். இறந்தவர் களின் உடல்களுக்கு அமைச்சர் வீரமணி அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 7 சடலங்களையும் மேல்பட்டி- பேரணாம்பட்டு சாலையில் வைத்து, மாலை 5 மணியளவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலின்பேரில், குடியாத்தம் வட்டாட்சியர் கமலக்கண்ணன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் கணேசன் (ஆம்பூர்), விஜயகுமார் (குடியாத்தம்) ஆகியோர் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், அமைச்சர் வந்தால் மட்டுமே சடலத்தை எடுப்போம் என பொதுமக்கள் பிடிவாதமாக இருந்தனர். இதையடுத்து, வேலூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) நாராயணன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து இரவு 7.30 மணியளவில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டு, சடலங்களை அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.
இதற்கிடையே விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் வெங்கடேசன், லாரி உரிமையாளர் வெங்கடேசன் ஆகியோரை வேப்பங்குப்பம் போலீஸார் நேற்று கைது செய்தனர்.