

சசிகலா முதல்வராகப் பதவியேற்கத் தடை கோரி சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிமதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு, சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்தது.
பொது நல மனுவில், ''சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா முதல்வராக பதவியேற்க உள்ளார். ஒருவேளை வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் உடனடியாக பதவி விலக நேரிடும். இதன் காரணமாக தமிழகத்தில் கலவரம் வெடிக்க வாய்ப்புள்ளது.
வார்தா புயல், பண மதிப்பு நீக்கம், முதல்வர் ஜெயலலிதா மரணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆளும் கட்சி தொண்டர்களால் கலவரம் ஏற்பட்டால் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படும். எனவே அவர் பதவியேற்பதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இம்மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.