

பாரா ஒலிம்பிக் போட்டியிலே வெற்றி பெற்ற வீரர்களை, குறிப்பாக தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவைப் பாராட்டி, தமிழக அரசு நல்ல முறையில் கவுரவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அண்மையில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் சார்பில் யாரும் தங்கப் பதக்கம் பெற முடியாத நிலையில், 31வது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்து, தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில், தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட சேலம் மாரியப்பன் தங்கவேலு, உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்திருப்பது பெரிதும் பாராட்டுக்குரிய செய்தியாகும்.
இந்தப் பிரிவில் கலந்து கொண்ட மற்றொரு இந்திய போட்டியாளர் வருண் சிங் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார். பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு உட்பட இருவரையும் பாராட்டி வாழ்த்துகிறேன்.
நடந்து முடிந்த 31வது ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாராட்டு தெரிவித்து நிதி உதவி அளித்ததைப் போலவே, இந்த பாரா ஒலிம்பிக் போட்டியிலே வெற்றி பெற்ற வீரர்களை, குறிப்பாக தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவைப் பாராட்டி, தமிழக அரசு நல்ல முறையில் கவுரவிக்க வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.