ஒரே நாளில் 283 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி

ஒரே நாளில் 283 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி
Updated on
1 min read

தேர்தல் வருவதைக் கருத்தில் கொண்டு, மின் வாரிய அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டதால், புதிய மின் நிலையங்களில் அதிக அளவு மின்சாரம் உற்பத்தியானது. புதன்கிழமை அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் 283 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்தனர். கூடங்குளம் அணு மின் நிலையத்தில், மற்ற அனைத்து மின் நிலையங்களை விட அதிகமாக 15 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தியானது.

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி கடந்த வாரம் பெரும் சரிவை சந்தித்தது. தமிழக மின் நிலையங்களிலும் கோளாறு ஏற்பட்டு, திடீரென கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் சென்னையின் சில பகுதிகளில் 2 மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் 5 மணி நேரமும் மின்வெட்டு அமலானது.

மின்வெட்டால் பொதுமக்களும் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளும் பாதிக்கப்பட்டனர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களும், மின்வெட்டை மையமாக வைத்தே பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினர்.

இதனால், மின் துறை அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து மின் துறை பணியாளர்களும் பொறியாளர்களும், கூடுதல் நேரம் பணியமர்த்தப்பட்டு, பழுதான மின் நிலையங்களில் சீரமைப்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். இதன் பலனாக திங்கள்கிழமை மாலை பழுதான நிலையங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின.

புதிதாகக் கட்டப்பட்ட வட சென்னை விரிவாக்கம் நிலையத்தின் 2 அலகுகளில், தலா 550 மெகாவாட், வள்ளூர் நிலையத்தில் 2 அலகுகளில் தலா 490 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. கடந்த மார்ச் 6-ம் தேதி பழுதான மேட்டூர் புதிய மின் நிலையம், வியாழக்கிழமைக்குள் உற்பத்தியை தொடங்கிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின் துறை அதிகாரிகளின் கடின முயற்சியால், கடந்த 3 நாட்களாக தமிழகத்துக்கு மின்சாரம் தரும் நிலையங்களில் அதிக அளவு உற்பத்தியாகியுள்ளது. புதன்கிழமை, அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் 283.62 மில்லியன் யூனிட்கள் மின்சாரம் உற்பத்தியானது.

இதில், மற்ற மின் நிலையங்களைவிட மத்திய அரசுக்கு சொந்தமான கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஒரு அலகில் மட்டும் அதிகபட்சமாக 24 மணி நேரத்தில், 15.81 மில்லியன் யூனிட்கள் மின்சாரம் உற்பத்தியானது. இதற்கு அடுத்தபடியாக, காற்றாலைகள் மூலம் 10.92 மில்லியன் யூனிட் மின்சாரமும், மத்திய அரசின் வள்ளூர் அனல் மின் நிலையத்தின் முதல் அலகில் 10.41 மில்லியனும், இரண்டாம் அலகில் 10.08 மில்லியன் யூனிட்களும் மின்சாரம் உற்பத்தியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in