

சட்டப்பேரவையில் திமுகவினர் எழுப்பும் பிரச்சினைகளுக்கு உரிய புள்ளிவிவரங்களுடன் உடனுக் குடன் பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கியுள்ளார்.
அதிமுக செயற்குழு கூட்டம், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்றனர்.
அதிமுக ஆட்சி அமைத்தாலும், 89 எம்எல்ஏக்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக திமுக உள்ளது. அக்கட்சி சார்பில் அனுபவம் வாய்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அதிக அளவில் உள்ளனர். எனவே, அமைச்சர்கள் தங்கள் துறைகள் பற்றிய விவரங்களை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். திமுகவினர் என்ன பிரச்சினை எழுப்புவார்கள் என்பதை முன்கூட்டியே யூகித்து பதிலை தயார் செய்ய வேண்டும். திமுகவினருக்கு உரிய புள்ளிவிவரங்களுடன் பதிலடி கொடுக்க அதிமுக எம்எல்ஏக்கள் தயாராக இருக்க வேண்டும் என ஜெயலலிதா அறிவுரை வழங்கியதாக கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் எம்எல்ஏ ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.
ஏ.பி.பரதனுக்கு இரங்கல்
மறைந்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சீனிவேல், முன்னாள் எம்எல்ஏக்கள் எம்.ஆறுமுகம், கே.என்.சண்முகம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் 93 பேரின் மறைவுக்கு செயற்குழுவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன், மக்களவை முன்னாள் தலைவர் பி.ஏ.சங்மா, கிறிஸ்தவ மக்கள் கட்சியின் தலைவர் ஏ.எஸ்.எம்.மரியநல்லு, சர்ச் பார்க் பள்ளி ஆசிரியை கேத்தரின் சைமன், பிலிம் நியூஸ் ஆனந்தன், திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர், திரைப்பட ஒளிப்பதிவாளர் என்.எஸ்.வர்மா ஆகியோரின் மறைவுக்கு செயற்குழு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
செயற்குழுவை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டதால் ராயப்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பல ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.